வேளாண் சட்ட விவகாரம் உச்ச நீதிமன்ற தீர்ப்பு நிரந்தர தீர்வாக இருக்காது: கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: மத்திய பாஜ அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் சீர்குலைக்கிற வகையில் நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்தப்படுவதை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்திருப்பது ஒரு இடைக்கால தீர்வே தவிர, நிரந்தர தீர்வாக இருக்கமுடியாது. விவசாய சங்கங்களின் ஒரே கோரிக்கை வேளாண் சட்டங்களை திரும்பப்பெறவேண்டும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப் பாதுகாப்பு, ஒப்பந்த விவசாயத்தை ரத்து செய்யவேண்டும் என்பதே. ஆனால், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த நான்கு பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்திருக்கிறது. அக்குழுவினர் அனைவருமே மத்திய பாஜ அரசின் வேளாண் சட்டங்களை பகிரங்கமாக ஆதரித்து பல காலக்கட்டங்களில் நாளேடுகளில் கட்டுரை எழுதியவர்கள்.   

விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதால் விவசாயிகளின் கோரிக்கைக்கு தீர்வு காண முடியாது. எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பால் எந்த பயனும் விவசாயிகளுக்கு ஏற்படப்போவதில்லை. இது ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகவே கருதவேண்டியிருக்கிறது. உச்ச நீதிமன்ற ஆணைக்கு பிறகும் விவசாயிகள் போராட்டம் தொடரும் என்று விவசாய சங்கங்கள்  அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல்  போராடுகிற விவசாயிகளை வாழ்த்துகிறோம்.

தமிழகத்தில் ராகுல் அதிக இடத்தில் பிரசாரம்

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சத்தியமூர்த்திபவனில் கூறியதாவது: தமிழர் திருநாளாம், பொங்கல் திருநாளன்று, ‘ராகுலின் தமிழ் வணக்கம்’ என்ற தலைப்பில் நாளை மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க ராகுல்காந்தி தமிழகம் வருகிறார்.விமானம் மூலம் மதுரைக்கு காலை 11 மணிக்கு வரும் அவர், அவனியாபுரத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் கலந்து கொள்கிறார். ராகுல்காந்தி விருப்பப்பட்டால் விவசாயிகளை சந்தித்து பேசுவார். கடந்த தேர்தலில் 6 நிகழ்வுகளில் ராகுல்காந்தி கலந்து கொண்டார். இப்போது இந்த தேர்தலில் அதை விட அதிகமான நிகழ்வுகளில் கலந்துகொள்ளவார். தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் அவர் வர உள்ளார். மிகப் பெரிய அளவில் ராகுல்காந்தியை தமிழகத்தில் பயன்படுத்த இருக்கிறோம்.

Related Stories: