கொரோனா நோயாளிகள் மற்றும் டாக்டர்களுக்கு சாப்பாடு சப்ளை செய்த ஓட்டல்களுக்கு தர வேண்டிய ரூ.300 கோடி எங்கே? அரசுக்கு ஓட்டல் உரிமையாளர்கள் கேள்வி

சென்னை: கொரோனா நோயாளிகள் மற்றும் டாக்டர்களுக்கு உணவு வழங்கிய ஓட்டல் உரிமையாளர்களுக்கு ரூ.300 கோடியை தமிழக சுகாதாரத்துறை தராமல் இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சென்னை ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவரும், வசந்தபவன் ஓட்டல் உரிமையாளருமான எம்.ரவி கூறியதாவது: கொரோனா நோயாளிகளுக்கு தமிழக அரசு உணவு வழங்கியதில் ஓட்டல் வியாபாரிகளுக்கு கடந்த 4 மாதமாக ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்கிறது. நோயாளிகள் மற்றும் டாக்டர்களுக்கு உணவு வழங்கியதற்கு பணம் தர மறுக்கிறார்கள். இதில் முதல்வர் உடனடியாக தலையிட்டு இந்த பிரச்னையை தீர்த்து வைக்காவிட்டால் ஓட்டல் முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

ஓட்டல் தொழில் செய்பவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் பொங்கல் பண்டிகைக்கு முன் தமிழக அரசு பணத்தை விடுவிக்க வேண்டும் என்று முதல்வருக்கு வேண்டுகோளாக வைக்கிறோம். சென்னையில் மட்டும் ரூ.60 கோடியும், தமிழகம் முழுவதும் ரூ.300 கோடி தர வேண்டியுள்ளது. இதனால், ஓட்டல் அதிபர்கள் பொங்கல் கொண்டாட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார். கொரோனா நோயாளிகள் பல லட்சம் பேருக்கு தனியார் ஓட்டல்கள் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ள நபர் தற்போது கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார். அவரால் எளிதாக மூச்சுவிட கூட முடியாமல் கஷ்டப்பட்டு ஆடியோவில் தனது குரலை பதிவு செய்து முதல்வர் பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: