5 நாள் பொங்கல் விடுமுறையில் 750 கோடிக்கு மது விற்க இலக்கு

சென்னை: தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் 80 முதல் 90 கோடி வரையில் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற விடுமுறை தினங்களில் இந்த வருவாய் இரட்டிப்பாகும். அந்தவகையில், 2021 புத்தாண்டு பண்டிகைக்கு 297 கோடி வருவாய் கிடைத்தது.   

தமிழகத்தில் வரும் 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 5 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால், டாஸ்மாக் கடைகளில் எதிர்பார்த்ததை விட மதுவிற்பனை அதிகரிக்கும்.

எனவே, பொங்கல் பண்டிகைக்கு மதுபானங்கள் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க கூடுதல் மதுபானங்களை இருப்பு வைக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக, 2 லட்சம் வருவாய் கிடைக்கும் கடைகளில் 10 லட்சம் வரையிலும், 4 லட்சம் வருவாய் கிடைக்கும் கடைகளில் 18 லட்சம் வரையிலும் மதுபானங்களை இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக அந்தந்த மாவட்ட மேலாளர்கள் மேற்பார்வையில் கடை ஊழியர்கள் மதுபானங்களை குடோன்களில் இருந்து கடைகளுக்கு கொண்டுசெல்லும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். 5 நாள் தொடர் விடுமுறையில் 750 கோடிக்கு மது விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: