காரைக்குடியில் சகதிக்கு நடுவே நடக்குது வாரச்சந்தை: காய்கறி வாங்க வரும் மக்கள் கடும் அவதி

காரைக்குடி: காரைக்குடி கணேசபுரம் பகுதியில் கொப்புடைய நாயகி அம்மன் கோவில் நிர்வாகத்தின் இடத்தில் ஒவ்வொரு வாரம் திங்கள்கிழமையில் வாரச்சந்தை கூடுகிறது. 6 ஏக்கருக்கு மேல் உள்ள இவ்விடத்தில் காரைக்குடி, அரியக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, சாக்கோட்டை, கல்லல், பெரியகோட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பெரிய மற்றும் சிறிய அளவில் 200க்கும் மேற்பட்ட கடைகள் போடப்படும். காரைக்குடி சுற்றுப்புற மக்களும், அமராவதிபுதூர், சாக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் இருந்து 5000க்கும் மேற்பட்ட மக்கள் காய்கறிகள் வாங்க வந்து செல்கின்றனர்.

காய்கறிகள் தவிர மீன், கருவாடு போன்ற அசைவ பிரியர்களுக்கான வியாபாரமும் நடக்கிறது. பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இச்சந்தையில் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாக உள்ளது. மழையால் சந்தைபகுதி முழுவதும் சேறும் சகதியுமாக மாறி உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது. இதனை சரி செய்ய கோவில் நிர்வாகம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சந்தை அன்று ஒதுக்கப்படும் காய்கறி கழிவுகள் அங்கேயே குவிக்கப்படுவதால் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திக தலைமைகழக பேச்சாளர் பிராட்லா கூறுகையில், பல ஆண்டுகளாக இப்பகுதியில் வாரச்சந்தை நடக்கிறது. காரைக்குடியை தவிர பல்வேறு பகுதியை சேர்ந்த மக்களும் காய்கறிகள் வாங்க வருகின்றனர். ஆனால் அவர்கள் உள்ளே வந்துவிட்டு வெளியே செல்வதற்குள் பாடாய்படும் அவலநிலை உள்ளது. சந்தைபகுதி முழுவதும் சகதியாக காட்சியளிக்கிறது. கடைகள் போட முறையான இடம் இல்லாததால் நடக்ககூட இடம் இல்லாமல் ஆங்காங்கே கடை போட்டுள்ளனர். முறையாக சுத்தம் செய்யாததால் துர்நாற்றம் வருகிறது.

சகதி, கழிவுநீர் தேங்கி உள்ள பகுதியில்தான் காய் கறிகளை வைத்து விற்பனை செய்கின்றனர். இதனால் தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது. வருமானத்தில் மட்டும் அக்கறை காட்டும் நிர்வாகம் சந்தையை முறைப்படுத்தி கடைகள் கட்டவோ, மக்கள் நடந்து செல்ல வசதியாக சாலை அமைக்கவோ நடவடிக்கை எடுக் கவில்லை. பராமரிப்பு என்பது முற்றிலும் இல்லை. திறந்தவெளி நோய் பரப்பும் கூடாரமாக உள்ள இச்சந்தையை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: