நவநீத கிருஷ்ணன் கோயிலில் மார்கழி மாத கூடாரவள்ளி உற்சவம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் கோயிலில். மார்கழி மாத கூடாரவள்ளி உற்சவம் நடந்தது. மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணை உருண்டை பாரை அருகே ஸ்ரீநவநீதி கிருஷ்ணன் கோயில் அமைந்துள்ளது. 450 ஆண்டுகள்  பழமையான இக்கோயில் மிகவும் பிரபலமானது. இங்கு சென்னை, புதுச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து, சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இங்கு மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை சாற்றுடன்  பஜனை, கூடாரவள்ளி உற்சவம் நடப்பது வழக்கம். இந்நிலையில். கடந்த மார்கழி முதல் நாள்முதல் தொடர்ந்து, ஆண்டாள் திருப்பாவை சாற்று முறையுடன் கூடிய பஜனை மற்றும் கூடார வள்ளி உற்சவம் நடந்து வருகிறது.

இதையொட்டி, மார்கழி 27வது நாளான நேற்று அலங்கரிக்கப்பட்ட திருக்கோலத்தில் ஸ்ரீநவநீதகிருஷ்ணன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது, பக்தர்கள் ஆண்டாள் திருப்பாவை பாசுரங்களை பாடினர். சிறுவர்கள் பாரம்பரிய வேட்டி, சட்டை  அணிந்து சுவாமியை சுற்றி வந்து கோலாட்டம் ஆடினர். முன்னதாக காலையில், ஸ்ரீநவநீதகிருஷ்ணனுக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் ஆராதனை நடந்தது. கூடார வள்ளி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்  செய்தனர்.

Related Stories: