சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு செல்ல வசதியாக கூடுதலாக 310 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: எம்டிசி மேலாண் இயக்குனர் இளங்கோவன் தகவல்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 310 சிறப்பு இணைப்பு பஸ்கள் இயக்கப்படும் என அதன் மேலாண் இயக்குநர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் மாதவரம் புறநகர் பேருந்து நிலையம், தாம்பரம் புதிய பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் புறப்படுகிறது.

இந்த 5 பேருந்து நிலையங்களுக்கு பொதுமக்கள் எளிதாக செல்ல வசதியாக, சென்னையிலிருந்து 11, 12, 13 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் 10,228 பஸ்களில் 11ம் தேதி 2,226 பஸ்களும், 12ம் தேதி 4,000ம், 13ம் தேதி 4,002 பஸ்கள் என பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 5,993 பேருந்துகள் என மொத்தம் 16,221 பஸ்கள் இயக்கப்படுகிறது.எனவே பயணிகளின் வசதிக்காக 310 சிறப்பு இணைப்பு பஸ்கள் எம்டிசி சார்பில் இயக்கப்படுகிறது. அதன்படி கோயம்பேடு-116, தாம்பரம் புதிய பேருந்து நிலையம்-114, பூந்தமல்லி-57, மாதவரம் புறநகர் பேருந்து நிலையம்-16, கே.கே.நகர் பேருந்து நிலையத்திற்கு 7 என மொத்தமாக 310 பேருந்துகள் கூடுதலாக 24 மணி நேரமும் இயக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: