முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பை கண்டித்து சென்னையில் இலங்கை துணைத்தூதரகம் முற்றுகை: வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கைது

சென்னை: இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் எழுப்பப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண்-நினைவு முற்றம் இடித்து தகர்க்கப்பட்டது. இதனை கண்டித்து மதிமுக சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகம் முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். போராட்டத்தில் திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்புகளின் தலைவர்கள், தமிழ் உணர்வாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட தலைவர்கள் இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்கவைத்தனர். பின்னர், அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

* 258 பேர் மீது வழக்குப்பதிவு

தடையை மீறி இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்ததால், நுங்கம்பாக்கம் போலீசார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உட்பட 258 பேர் மீது ஐபிசி 143, 188, 269, சிட்டி போலீஸ் ஆக்ட் 41 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: