எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க நேரம் ஒதுக்கவேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மாவட்ட சிறப்பு நீதிமன்றங்கள் எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் விசாரணைக்கென குறிப்பிட்ட நேரம் ஒதுக்க வேண்டுமென சிறப்பு நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்.பி - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், அவற்றை கண்காணிப்பது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்ற பதிவாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த உத்தரவின் படி நிலுவையில் உள்ள எம்.எல்.ஏ க்கள், எம்.பி.க்கள் மீதான அவதூறு வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தனி நீதிபதி சதீஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக எடுத்துரைத்து வழக்கின் முன்னேற்றங்களை தாக்கல் செய்தார்.

தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றங்களையே சிறப்பு நீதிமன்றங்களாக செயல்பட அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள போதும், ஏற்கனவே சம்பந்தப்பட்ட செஷன்ஸ் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், எம்பி எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கை விசாரிப்பதில் முன்னேற்றம் இல்லை எனவும், சென்னையில் உள்ள மூன்று சிறப்பு நீதிமன்றங்களில், ஒரு நீதிமன்றத்திற்கு இதுவரை நீதிபதி பணியிடம்  காலியாக இருப்பதாக தெரிவித்தார்.

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், எம்.எல்.ஏக்கள், எம்.பி க்கள் மீதான வழக்கு விசாரணையை துரிதப்படுத்தும் வகையில் மாவட்ட நீதிமன்றங்கள் இதற்கென குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வழக்குகளை முன்னுரிமை கொடுத்து விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டதோடு, சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Related Stories: