முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும்...! கே.பி.முனுசாமியின் கருத்தை பெரிதாக எடுக்கவில்லை: பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி பேட்டி

திருச்சி: தமிழகத்தில் பெரும்பான்மையான கட்சி என்பதால் முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி திருச்சியில் பேட்டி அளித்துள்ளார். ஓபிஎஸ், ஈபிஎஸ் எங்களை ஆதரிக்கின்றனர்; கே.பி.முனிசாமி கருத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 9-ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் அ.தி.மு.க. கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அ.தி.மு.க.வின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி, தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை; அவர்கள் அ.தி.மு.க. அல்லது தி.மு.க. முதுகில் ஏறித்தான் பயணம் செய்ய முடியும். 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையே தான் போட்டி என்றார்.  

இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தேசிய பொதுச்செயலாளரும், பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளருமான சி.டி.ரவி கூறுகையில், தமிழகத்தில் பெரும்பான்மையான கட்சி என்பதால் அதிமுகவே முதல்வர் வேட்பாளரை தீர்மானிக்கும். ஓ.பி.எஸ், இ.பி.எஸ் எங்களை ஆதரிக்கின்றனர். கே.பி.முனுசாமியின் கருத்தையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றார். அதிமுக தலைவர்கள் எடுக்கும் முடிவுகளை பாஜக ஏற்றுக்கொள்ளும் என்றும் கூறினார்.

Related Stories: