சேலம் ரயில்வே கோட்டத்தில் திருப்பூர்-கவுகாத்தி பார்சல் ரயில் விரைவில் இயக்கம்-தனியாருடன் ஒப்பந்தம் செய்ய அதிகாரிகள் பேச்சு

சேலம் : திருப்பூர்-கவுகாத்தி பிரத்யேக பார்சல் எக்ஸ்பிரஸ் ரயில், விரைவில் இயக்கத்திற்கு வருகிறது. இதற்காக தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய ரயில்வே அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க பயணிகள் ரயில் இயக்கத்தை, ரயில்வே நிர்வாகம் நிறுத்தி வைத்ததும், பார்சல் ரயில் சேவையை அதிகப்படுத்தியது.

லாரி போக்குவரத்து இல்லாத அந்த நேரத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு உணவு பொருட்கள், மருத்துவ பொருட்கள், கட்டுமானம் மற்றும் விவசாய இடுபொருட்களை சரக்கு ரயில்களில் கொண்டுச் சென்றனர். மேலும், காய்கறி, பழங்கள், பால், மாஸ்க், சானிடைசர், மருந்துகள் போன்றவற்றை பார்சல் எக்ஸ்பிரஸ் ரயில்களில் எடுத்துச் சென்றனர். ஒவ்வொரு ரயில்வே கோட்டத்திலும் குறிப்பிட்ட நகரங்களுக்கு இடையே பார்சல் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கினர்.

இத்தகைய பார்சல் ரயில்களை, ஆண்டு முழுவதும் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து இயக்கினால், ரயில்வேக்கு லாபம் கிடைக்கும் என அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். இப்பரிந்துரையின் பேரில், தற்போது நாடு முழுவதும் தனியார் நிறுவனங்களுடன் 5 முதல் 10 ஆண்டுகள் வரையில் பிரத்யேக பார்சல் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சேலம் ரயில்வே கோட்டத்தில், கோவை-பட்டேல்நகர் (டெல்லி) பிரத்யேக பார்சல் எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த 4 மாதத்திற்கு முன் தனியார் நிறுவன ஒப்பந்தத்தின் அடிப்படையில் தனது இயக்கத்தை தொடங்கியுள்ளது. இந்த ரயிலில் விவசாயிகள், வியாபாரிகள், தொழில் நிறுவனத்தார், தங்களின் உற்பத்தி பொருட்களை அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன், கோவை வடக்கு-ராஜ்கோட் பிரத்யேக பார்சல் எக்ஸ்பிரஸ் ரயில், தனியார் நிறுவன ஒப்பந்தத்துடன் இயக்கத்திற்கு வந்துள்ளது. இந்த ரயிலை 6 ஆண்டு காலத்திற்கு இயக்க தனியார் நிறுவனம், ரயில்வேக்கு ₹46.80 கோடி பணம் செலுத்துகிறது. இந்த ஒப்பந்தத்தை கோட்ட மேலாளர் ஸ்ரீனிவாஸ், முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதேபோல், திருப்பூர்-நியூ கவுகாத்தி இடையே மற்றொரு பிரத்யேக பார்சல் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஒப்பந்த பேச்சுவார்த்தையை தனியார் நிறுவனத்துடன் அதிகாரிகள் குழு நடத்தி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் வஞ்சிப்பாளையத்தில் இருந்து புறப்படும் இந்த பார்சல் ரயில், சேலம் மாவட்டம் மல்லூர், விஜயவாடா, குர்தா ரோடு, கராக்பூர், ஹவுரா, நியூ ஜல்பேகூரி ஆகிய நிறுத்தங்களில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு நியூ கவுகாத்தி சென்றடையும் வகையில் இயக்கப்படவுள்ளது. இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘சேலம் கோட்டத்தில் தனியார் நிறுவனம் மூலம் மூன்றாவது பார்சல் எக்ஸ்பிரஸ் ரயிலாக வஞ்சிப்பாளையம் (திருப்பூர்)-நியூ கவுகாத்தி பிரத்யேக பார்சல் ரயிலை இயக்கவுள்ளோம். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் ஒப்பந்தத்தை மேற்கொண்டு, இம்மாத இறுதிக்குள் இந்த பார்சல் ரயிலை இயக்கத்திற்கு கொண்டு வருவோம்,’ என்றனர்.

Related Stories: