தற்போது சமூகநீதிக்கு மட்டுமல்ல, சட்ட நீதிக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது அநீதி அதிமுக ஆட்சி விரைவில் வீழும்: சட்டத்துறை மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தற்போது சமூகநீதிக்கு மட்டுமல்ல, சட்ட நீதிக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்றும், அநீதி அதிமுக ஆட்சி விரைவில் வீழும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திமுகவின் சட்டத்துறை இரண்டாவது மாநாடு, சட்ட மற்றும் அரசியல் கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: இந்தக் காலத்தில் சமூகநீதிக்கு மட்டுமல்ல, சட்ட நீதிக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் தான் இத்தகைய கருத்தரங்கை திமுக வழக்கறிஞர் அணி ஏற்பாடு செய்துள்ளது. மக்கள் மன்றத்தில் மட்டும் பேசிக் கொண்டு இருக்க முடியாது, நீதிமன்றங்களையும் பயன்படுத்தியாக வேண்டும் என்ற நெருக்கடி எங்களுக்கு ஏற்பட்டுள்ளதைப் போல, நீதிமன்றங்களில் மட்டுமல்ல, மக்கள் மன்றங்களிலும் பேசியாக வேண்டும் என்ற நெருக்கடி உங்களைப் போன்ற வழக்கறிஞர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

அதன் விளைவாகத்தான் இத்தகைய கருத்தரங்கங்கள் ஏராளமாக நடத்தியாக வேண்டும்.வழக்கறிஞர்களின் பணி மகத்தானது; முக்கியமானது. வழக்கறிஞர்கள் இல்லாமல் அரசியல் இல்லை, அரசியல் கட்சிகள் இல்லை. அதுதான் உண்மை. எல்லா இயக்கங்களையும் வளர்த்தவர்கள் வழக்கறிஞர்கள் தான். திமுகவும் வழக்கறிஞர்களால் நிறைந்த இயக்கம் தான். சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தமிழகம் முழுவதும் திமுகவை காக்கும் வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள். இவை அனைத்துக்கும் மேலாக எனக்குக் கிடைத்த முதல் வெற்றி என்பது சட்டத்துறையால் கிடைத்து என்பதை எனது வாழ்நாளில்; உயிர் போகிற வரை நான் மறக்க மாட்டேன். 95 வயது வரை இந்தத் தமிழ்ச்சமுதாயத்தின் உயர்வுக்காக ஓயாமல் உழைத்த முத்தமிழறிஞர் கலைஞருக்கு, அவரது வாழ்நாள் ஆசையான ‘அண்ணாவுக்கு பக்கத்தில் இருக்க வேண்டும்’ என்ற ஆசையானது எங்கே நிராசையாகப் போய்விடுமோ என்று நினைத்தபோது சட்டத்தின் சம்மட்டியால் அதிமுக அரசின் மண்டையில் கொட்டி அந்த உரிமையை மீட்டுக் கொடுத்தவர்கள் நீங்கள் என்பதை நான் மறக்க மாட்டேன்.

சட்டத்துறையின் சாதனைக்கு மகுடமாகச் சொல்லத்தக்கது ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு. நமக்கு ஜெயலலிதா மீதோ, சசிகலா குடும்பத்தினர் மீதோ தனிப்பட்ட பகை எதுவும் இல்லை. 1991-96ம் ஆண்டு என்பது தமிழகத்தின் இருண்ட காலம் என்று சொல்லத் தக்க அளவில் தமிழகம் சூறையாடப்பட்டது. இதனைத் தடுக்க வேண்டிய கடமை திமுகவிற்கு இருந்தது. இதற்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை வாங்கித் தரவேண்டிய பொறுப்பு திமுகவுக்கு இருந்தது.  அனைத்து இடங்களிலும் கண்கொத்திப் பாம்பாக திமுக சட்டத்துறை கண்காணித்த காரணத்தால் தான் 2014ம் ஆண்டு இவர்கள் நால்வருக்கும் நான்கு ஆண்டு சிறைத்தண்டனை தரப்பட்டது.இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டார்.

ஜெயலலிதா குற்றவாளி தான் என்று தீர்ப்பளிக்கப்பட்டு அவரது வாகனத்தில் இருந்து தேசியக் கொடியை கழற்ற வைத்தது திமுக வழக்கறிஞர் அணி. கொரோனா காலத்தில் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் மூலமாக உணவுப் பொருள்களும் மருந்துகளும் கொடுக்க நாம் முயன்றபோது அதற்கு தமிழக அரசு தடை போட்டது. அந்த தடையையும் உடைத்தது சட்டத்துறை. குரூப் 1 தேர்வுகளில் உள்ள முறைகேடுகளை கண்டறிந்து வழக்கு போட்டது சட்டத்துறை. மருத்துவக் கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடுக்காக வழக்கு போட்டு வெற்றி பெற்றது சட்டத்துறை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உரிமை கிடைக்க போராடியது சட்டத்துறை. அப்படி இடஒதுக்கீடு கொடுத்தபிறகும் பணம் கட்டமுடியாமல் தவித்த மாணவர் உரிமையை நிலைநாட்டியதும் சட்டத்துறை. மூன்று வேளாண் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருகிறது சட்டத்துறை. அரசு பணத்தை பொங்கல் பரிசு என்ற பெயரால், ஏதோ அதிமுக பணத்தை கொடுப்பதை போல காட்டிக் கொண்ட போது போது நீதிமன்றத்துக்கு சென்று தடுத்தது சட்டத்துறை!.

ரேசன் கடைகளில் விளம்பர பலகைகள் வைக்க தடை வாங்கியது சட்டத்துறை.எடப்பாடி பழனிசாமியின் டெண்டர் முறைகேடுகளைக் கண்டுபிடித்து, அந்த புகாரை சிபிஐ விசாரிக்கலாம் என்ற உத்தரவைப் பெற்றதும் சட்டத்துறை. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் சிலர் மீது ஆளுநரிடம் ஊழல் புகாரை கொடுத்துள்ளோம். அதற்கான தரவுகளை திரட்டிக் கொடுத்ததும் சட்டத்துறை. உங்களுக்கு வேலை அதிகமாக இருக்கிறது. நாட்டில் எல்லாவற்றையும் விட உயர்ந்தது சட்டம் தான். நீதியை நிலைநாட்ட நீங்கள் போராடியாக வேண்டும். நேர்மையை நிலைநாட்ட நீங்கள் வாதாடியாக வேண்டும். திமுக நிலைபெற நீங்கள் உழைத்தாக வேண்டும். நீதியை நிலை நாட்ட திமுக சட்டத்துறை சகோதரர்கள் தங்களது பங்களிப்பை தொய்வில்லாமல், தொடர்ந்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கருத்தரங்கில் திமுக பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக சட்டத்துறை தலைவர் ஆர்.சண்முகசுந்தரம்,   சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், மாநிலங்களவை எம்பிக்கள் என்.ஆர்.இளங்கோ, பி.வில்சன், சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன், திமுக இளைஞரணி துணை செயலாளர் தாயகம் கவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நீதியை நிலை நாட்ட திமுக சட்டத்துறை சகோதரர்கள் தங்களது பங்களிப்பை தொய்வில்லாமல், தொடர்ந்து செய்ய வேண்டும்.

Related Stories: