தனி ஒதுக்கீடு கோரிக்கைக்கு முழுக்கு வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு போதும்: சட்டப்பேரவை கூட்டத்துக்கு முன் நிறைவேற்ற ராமதாஸ் தீர்மானம்

சென்னை:பாமக நிர்வாகக் குழுக் கூட்டம் நேற்று இணைய வழியில் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ்,  இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாமக தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்றார். கூட்டத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, கீழ்க்கண்ட  தீர்மானம் அனைத்து உறுப்பினர்களின் முழுமையான ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை சற்று தளர்த்திக் கொண்டு, வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் திட்டத்திற்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஒப்புதல் அளித்தார். அதனடிப்படையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உரிய உள் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருடன் பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில், வடக்கு மண்டல இணைப் பொதுச்செயலாளர் ஏ.கே மூர்த்தி, புதுவை மாநில அமைப்பாளர் தன்ராஜ் ஆகியோர் அடங்கிய குழு குழு பேச்சு நடத்தியது.

அதன் தொடர்ச்சியாக மூத்த அமைச்சர்கள் குழு திங்கள் கிழமை பாமக நிறுவனர் ராமதாசை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்துப் பேசுவர் என்று அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் இப்போது உள் ஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்ளத் தயார் என்று அறிவித்துள்ள நிலையில், அதை பயன்படுத்திக் கொண்டு, வன்னியர்களின் உள் ஒதுக்கீடு கோரிக்கையை முதல்வர், துணை முதல்வர் நிறைவேற்ற வேண்டும். இந்த கோரிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடருக்கு முன்பாக நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்ய தாமதமானால் பாமக செயற்குழுவை உடனடியாகக் கூட்டி, அரசியல் ரீதியிலான அடுத்தக் கட்ட முடிவை எடுப்பது.

Related Stories: