பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய விஐபிக்கள் நடமாட்டம் ரகசியமாக கண்காணிப்பு: முக்கிய குற்றவாளிகள் பட்டியல் தயாரிப்பில் சிபிஐ தீவிரம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில், விஐபிக்களின் நடமாட்டத்தை சிபிஐ அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.  கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாலியல் வழக்கில், இரண்டு ஆண்டுக்கு பிறகு கடந்த 6ம் தேதி பொள்ளாச்சியை சேர்ந்த அதிமுக பிரமுகர் அருளானந்தம், ஹேரன்பால், பாபு ஆகிய 3 பேரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். இவர்களில், அருளானந்தம் பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளராக இருந்தார். தற்போது, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அருளானந்தம் உள்பட மூவரது செல்போன் மற்றும் லேப்டாப்பில் உள்ள பதிவுகளின் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பாலியல் வழக்கில் ஆளுங்கட்சி அரசியல் பிரமுகர்களின் வாரிசுகள் பலருக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஆளுங்கட்சியின் முக்கிய புள்ளிகள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இந்த விவகாரத்தில், தொடர்புடைய அனைத்து நபர்களையும் வெளியே கொண்டுவர வேண்டும் என்ற முனைப்புடன் சி.பி.ஐ. அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.

இதற்காக, இவ்வழக்கை விசாரிக்கும் சிபிஐ டிஎஸ்பி ஒருவர் தலைமையில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் என 7 பேர் கொண்ட குழுவினர் பொள்ளாச்சி அரசு விருந்தினர் மாளிகையில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அங்கிருந்தபடி, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல நேரங்களில் சத்தமின்றி கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். உள்ளூர் போலீசார் என்றால் சீருடை அணிந்து செல்லும்போதும், அரசுக்கு சொந்தமான வாகனத்தில் செல்லும் போதும் வெளியே தெரிந்துவிடும். ஆனால், இவர்கள் சாதாரண உடை அணிந்து, அதுவும் வாடகை கார்களில் பயணித்து செல்வதால் யாருக்கும் சந்தேகம் எழவில்லை. அந்த அளவுக்கு, மிக கச்சிதமாக தங்களது பணியை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோ பதிவின் அடிப்படையில், அந்த பெண்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, தகவல் திரட்டுகின்றனர். வாக்குமூலமும் பெறுகின்றனர். இதனால், இவ்வழக்கில் இன்னும் சில தினங்களில் மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஐபிக்கள் மற்றும் முக்கிய தலைவர்களின் வாரிசுகள் கண்காணிக்கப்படுவதால், ஆளும்கட்சியை சேர்ந்த பலர், பயம் காரணமாக, ஊரை காலி செய்துவிட்டு, வெளிமாவட்டங்களுக்கு சென்று விட்டனர். ஆனாலும், சி.பி.ஐ.யின் கழுகுப்பார்வையில் இருந்து யாரும் தப்ப முடியவில்லை. சி.பி.ஐ. அதிகாரிகள், தாங்கள் திரட்டியுள்ள தகவல்களுக்கு வலு சேர்க்கும் வகையில், அருளானந்தம் உள்பட 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வரும் 11ம் தேதி கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். அதற்கான, ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதற்கிடையே, முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் பண்ணை வீட்டிற்கும், அவருடன்  கைதான கூட்டாளிகளது வீட்டிற்கும் அடிக்கடி நேரில் சென்று விசாரணை  நடத்தி வருகின்றனர். போட்டோ, வீடியோ ஆதாரங்களை கைப்பற்றி வருகின்றனர். அருளானந்தம் உள்பட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்கும்போது, அவர்களின் வாக்குமூலத்தின்  அடிப்படையில் மேலும் சில முக்கிய புள்ளிகளை சி.பி.ஐ. போலீசார் வளைக்கக்கூடும் என்பதால் ஆளுங்கட்சி பிரமுகர்கள் ரொம்பவே கலக்கத்தில் உள்ளனர்.

உல்லாச வாழ்கை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ள 8 பேரும், தங்களது தந்தையின் செல்வாக்கால் வளர்ந்தவர்கள். ஆடம்பரமாக காரில் சுற்றுவது, ஓட்டலில் அறை எடுத்து தங்குவது, மது குடித்து உல்லாசமாக இருப்பது என படு ஜாலியாக பொழுதை கழித்துள்ளனர். ஆளுங்கட்சி முக்கிய புள்ளிகள் துணை நின்றதால் இவர்களை யாராலும் அசைக்க முடியாமல் இருந்தது. தற்போது, சி.பி.ஐ. பிடி இறுகுவதால் குற்றவாளிகள், ஆதரவாளர்கள், ஆளும்கட்சியினர் என எல்லோருமே கதிகலங்கி தவிக்கின்றனர்.  

நீளும் பட்டியல்...!

கைதாகியுள்ள காம கும்பல், தங்களது வலையில் ஒரு பெண்ணை வீழ்த்திவிட்டால் போதும், அப்பெண் மூலம் மேலும் பல பெண்களை வரவழைத்து, பாலியல் ரீதியாக இன்பம் அனுபவித்துள்ளனர். அத்துடன், செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளனர். இதை காட்டியே தொடர்ச்சியாக மிரட்டி வந்துள்ளனர். இப்படியே பட்டியல் நீண்டு, 200க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்துள்ளனர் என்கிறார்கள் ஊர் மக்கள்.

தற்கொலை ஏன்?

பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான சில பெண்கள் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இதை, வயிற்று வலி, குடும்ப பிரச்னை, வேலையில்லாத விரக்தி, குழந்தையில்லாத ஏக்கம் என பல காரணங்களை கூறி, உள்ளூர் போலீசார், வழக்கை முடித்து வைத்துவிட்டனர். இதையெல்லாம் தோண்டினால், இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கும் என்கிறார்கள் மாதர் சங்கத்தினர். அத்துடன், பாதிக்கப்பட்ட ெபண்கள் தைரியமாக புகார் அளிக்க முன்வரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: