நன்றி குங்குமம் தோழி
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஒரு மசாஜ் மையம் அது. அங்குள்ள நீச்சல் குளத்தில் காற்றடைத்த டயர்களில் தலை மட்டும் தெரியும் அளவுக்கு பச்சிளம் குழந்தைகள் மிதந்தபடி காணப்படுகின்றன. என்ன அது என்று விசாரித்த போது குழந்தைகளுக்கான மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சி என்கிறார் அந்த ஸ்பாவின் உரிமையாளர் சுவாதி ஜில்லா.
நாம தான் வேலை, வீடு என்று ஓடிக் கொண்டு மன அழுத்தத்தில் இருக்கிறோம். பச்சிளம் குழந்தைகளுக்குமா மன அழுத்தம்? ‘‘நம்மை போன்றே அந்த பச்சிளம் குழந்தைகளுக்கும் டென்ஷன், மன அழுத்தம் எல்லாம் உண்டு. இதனால் தான் பிறந்த குழந்தைகள் முதல் 9 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு என தனி மன அழுத்தத்தை போக்கும் மையத்தை துவக்கியுள்ளோம்’’ என்கிறார் சுவாதி ஜில்லா. குழந்தைகளுக்கான உடல் மசாஜ், உடற்பயிற்சி, தெரபி என அத்தனை அம்சங்களும் இந்த மையத்தில் கிடைக்கிறது. தாயின் கருவறையில் பனிக்குடம் என்ற அமைப்பில் தான் குழந்தை வளர்கிறது. இதனால் குழந்தைகளுக்கு நீச்சல் குளம் ஒன்றும் புதிதல்ல. இங்கு பயிற்சி பெறும் குழந்தைகளுக்கு மன அழுத்தம் போக்கப்படுவதுடன் அவர்கள் உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியத்துடனும் நல்ல அறிவாற்றலுடனும் திகழ்கிறார்கள். இந்தியாவில் குழந்தைகளுக்கு என்றே பிரத்யேக ஸ்பா இது தான். பேபி ஸ்பா குறித்து அதன் உரிமையாளர் சுவாதி ஜில்லா கூறுகையில், “பேபி ஸ்பா முற்றிலும் கைக்குழந்தைகளுக்கானது. பிறந்த குழந்தை முதல் ஒன்பது மாத குழந்தை வரை மட்டுமே அனுமதிக்கிறோம். தாயின் கருவறையில் எப்படி குழந்தைகள் மிதந்து கொண்டிருந்ததோ, அது போல தான் இங்கும் இவர்கள் நீச்சல் குளத்தில் மிதக்கிறார்கள். 9 மாதத்தை தாண்டிய வளர்ந்த குழந்தைகளுக்கு இங்கு அனுமதி கிடையாது. ஸ்பாவில் பிரத்யேக உடை அணிந்து, பாதுகாப்புக் கவசத்துடன் தான் குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுத் தரப்படுகிறது. கழுத்தில் மாட்டப்பட்டிருக்கும் நீச்சல் டியூப் குழந்தையை நீரில் மூழ்காமல் தடுக்கிறது. தரையில் விளையாடுவதைக் காட்டிலும் குளத்தில் நீந்தும் போது அதன் தசைப் பகுதிகள் மேலும் விரிவடையும். எல்லாப் பக்கமும் எளிதாகக் கை, கால்களை அசைத்து நீச்சல் அடிக்கும் போது குழந்தையின் உடல் திறன் மட்டுமின்றி அறிவாற்றலும் வளர்கிறது. இது தவிர கற்றல் திறன் மேம்பாடு, சீரான வளர்ச்சி, தீர்க்கமான கவனம், விழிப்புணர்வுடன் செயல்படும் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியும் இந்தக் குழந்தைகளுக்குக் கூடுதலாகக் கிடைக்கும்’’ என்றார் சுவாதி ஜில்லா.
பா.கோமதி