வன்னியர் இடஒதுக்கீட்டில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை: சில விஷமிகள் தவறான கருத்துக்களை பரப்புகின்றனர்: ஓபிஎஸ் விளக்கம்

சென்னை: வன்னியர் இடஒதுக்கீட்டில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். வன்னியர் இடஒதுக்கீட்டுக்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததாக தவறான கருத்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. சில விஷமிகள் தவறான கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பரப்பி வருவது வேதனை அளிக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தரவேண்டாம் என்றும், இவர்களுக்கு கொடுத்தால் மற்றவர்களும் வந்து நிற்பார்கள். பாமகவுக்கு மட்டும் இடஒதுக்கீடு தந்துவிட்டாலும், மற்ற சமுதாய மக்களின் ஓட்டுகள் வராது என்று ஓபிஎஸ் அதிமுக கூட்டத்தில் பேசியதாக தகவல் வெளியானது.

இது உண்மையா என்றும் தெரியவில்லை.. எனினும், இந்த பேச்சு குறித்து சோஷியல் மீடியாவில் ஓபிஎஸ்ஸுக்கு எதிரான கருத்துக்களும் பரவின. இந்நிலையில் வன்னியர் சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், சில விஷமிகள் தவறான கருத்தை பரப்பி வருவதாகவும் துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர்  தமது ட்விட்டர் பக்கத்தில், “வன்னியர் சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததாக தவறான கருத்துகளை சில விஷமிகள் சமூகவலைதளங்களில் பரப்பி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. முற்றிலும் உண்மைக்கு புறம்பான இந்த கருத்துகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: