ரேசன் கடையில் கொடுப்பது மாமனார் வீட்டு பொங்கல் சீதனம் அல்ல: ஆளுங்கட்சி விளம்பரத்திற்கு கமல்ஹாசன் தாக்கு

சென்னை : ரேசன் கடையில் கொடுப்பது மாமனார் வீட்டு பொங்கல் சீதனம் அல்ல என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார். தமிழகத்தில் கடந்த ஜனவரி 4ம் தேதி முதல் ரேஷன் அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.2500, அரிசி, கரும்பு, முந்திரி, திராட்சை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.  ஆனால் தமிழக அரசு தரும் பொங்கல் பரிசை அதிமுக ஓட்டாக மாற்ற விரும்புகிறது என்றும் அதனால் ரேஷன் கடை வாசல்களில் அதிமுக கட்சியின் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருப்பதாக திமுக குற்றம் சாட்டி நீதிமன்றம் வரை சென்றது.இதற்கு நீதிமன்றம் தனது கண்டனத்தையும் பதிவு செய்தது. நேற்றைய தினம், சேலத்தில் பொங்கல் பரிசு வழங்கும் ரேஷன் கடையில் இரட்டை இலை சின்னம் அச்சடித்து வாக்கு கேட்கும்விதமாக நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டதாக வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ரேசன் கடையில் கொடுப்பது மாமனார் வீட்டு பொங்கல் சீதனம் அல்ல. தங்கள் சொந்தப் பணத்தைக் கொடுப்பது போல ஆளுங்கட்சி விளம்பரம் செய்து கொள்வது ஆபாசமானது என தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் ரேஷன் கடை பிரச்சாரம் தொடர்வது குள்ள நரித்தனம் என்றும் ஒரிஜினல் நரிகள் மன்னிக்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.

Related Stories: