முன்னாள் எம்எல்ஏ தளி ராமச்சந்திரன் மீதான கொலை முயற்சி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை இருந்தவர் தளி ராமச்சந்திரன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரான இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த நாகராஜன் ரெட்டி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் தளி ராமச்சந்திரன், தன்னை கொலை முயற்சி செய்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தனக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் மேலும் வழக்கு விசாரணையை சேலம் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கை சேலம் மாவட்டத்திற்கு மாற்றுவது குறித்து தளி காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 25ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

Related Stories: