அரசின் விளக்கம் ஏற்பு: அம்மா மினி கிளினிக்குகளில் மருந்தாளுநர்களை நியமிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்.!!!!

சென்னை: அம்மா மினி கிளினிக்குகளில் மருந்தாளுநர்களை நியமிக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. காய்ச்சல், தலைவலி மற்றும் சிறிய நோய்கள் ஏற்பட்டால் உடனடியாக குணப்படுத்திக் கொள்ள தமிழகம் முழுவதும் அம்மா மினி கிளினிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மினி கிளினிக்குகளில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் இருந்து, அங்கு வருகின்ற நோயாளிகளுக்குப் பரிசோதனை செய்து உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் படிப்படியாக தொடங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, அம்மா மினி கிளினிக்குகளில் மருந்தாளுநர்களை நியமிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னைச் சேர்ந்த 2 மருந்தாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். மனுவில், சட்டப்படி மருத்துவர் பரிந்துரைப்படி மருந்தாளர்கள் மருந்து வழங்க வேண்டும். எனவே, மினி கிளினிக்குகளில் மருந்தாளுநர்களை நியமிக்கும் வரை தடை செய்ய வேண்டும் என்றும் அதிகம் பேர் மருந்தாளர் படிப்பு படித்து வேலையின்றி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் பார்மஸி சட்டப்படி, மருத்துவர்களோ மருந்தாளர்களோ மருந்து வழங்க விதி உள்ளதாகவும், மினி கிளினிக்குகளில் இட வசதி குறைவு என்பதால், மினி கிளினிக்குகளில் மருத்துவர்களே மருந்துகளை வழங்குவர் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று கொண்ட நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Related Stories: