சி.பி.ஐ. வசமிருந்த 103 கிலோ தங்கம் மாயமான விவகாரம்!: 3-வது நாளாக சுராணா நிறுவனத்தில் சி.பி.சி.ஐ.டி. ஆய்வு..!!

சென்னை: சி.பி.ஐ. வசமிருந்த 103 கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக 3-வது நாளாக சுரானா நிறுவனத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சி.பி.ஐ. வசமிருந்த 103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த அடிப்படையில் தற்போது சென்னை சவுகார்பேட்டையில் உள்ள சுராணா நிறுவனத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் 3-வது முறையாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி.-யின் டி.ஜி.பி. பிரதீப், ஐ.ஜி. சங்கர், விசாரணை அதிகாரி எஸ்.பி. விஜயகுமார் உள்ளிட்டோர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

2012ம் ஆண்டு சட்டவிரோத தங்க ஏற்றுமதி, இறக்குமதி விவகாரத்தில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதில் 400 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. வங்கி அதிகாரிகள், நிறுவனம் வாங்கிய கடனுக்காக தங்கத்தை எடைபார்த்த போது 103 கிலோ தங்கம் மாயமானது தெரியவந்தது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.

விசாரணை அதிகாரியாக எஸ்.பி. விஜயகுமாரை நியமித்து விசாரணை நடத்தியதில் கள்ளச்சாவி போட்டு 103 கிலோ தங்கம் திருடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்தகட்டமாக இந்த லாக்கர் யார் பொறுப்பில் இருக்கிறது; லாக்கரை செய்த நிறுவனம் யார்? உள்ளிட்ட தகவல்களை சேகரித்து அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டார்கள். அந்த அடிப்படையில் 3வது முறையாக சி.பி.சி.ஐ.டி. உயரதிகாரிகள் சுராணா நிறுவனத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன்பின்னர் தடயவியல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.

Related Stories: