பாணாவரம் அடுத்த மங்கலம் கிராமத்தில் மஞ்சள் நிறத்தில் குடிநீர் வினியோகம்-பொதுமக்கள் கடும் அதிர்ச்சி

பாணாவரம் : பாணாவரம் அடுத்த மங்கலம் கிராமத்தில் மாசடைந்த குடிநீரை விநியோகம் செய்வதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த மங்கலம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக ஏரியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அங்கிருந்து தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 20 நாட்களாக ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகி கடைவாசல் சென்றது. ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், குடிநீர் விநியோகம் செய்யும் ஆழ்துளை கிணறு முழுவதுமாக நீரில் மூழ்கியது. இதனால் அங்கிருந்து விநியோககம் செய்யப்படும் குடிநீர் மஞ்சள் நிறமாகவும், கலங்கலாகவும் மாசடைந்து வருகிறது. குழாய்களில் குடிநீர் பிடித்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் கடந்த 20 நாட்களாக குடிநீருக்கும், சமையல் செய்யவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தினமும் வெகு தூரம் சென்று, விவசாய கிணறுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில்  இருந்து சைக்கிள், பைக், ஆட்டோக்கள் மூலம் குடிநீர் எடுத்து வரும் அவலம் தொடர்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

மேலும், பாணாவரம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக ஏரி, குட்டை, குளங்களில் குடிநீர் தேவைக்காக போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மழைநீரில் மூழ்கி குடிநீர் மாசடைந்து வருகிறது. இதுபோன்ற நிலை பல்வேறு கிராமங்களில் தொடர்ந்து நடந்து வருவதால், அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

எனவே, மழைக்காலங்களில் இதுபோன்று மாசடைந்த நீரை பருகுவதால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது. இதனை கருத்தில் கொண்டு உறக்கத்தில் உள்ள ஊராட்சி நிர்வாகமும், கண்டும் காணாமல் உள்ள அதிகாரிகளும்  குடிநீர் தேவைக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: