திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்ராயண புண்ணியகால பிரம்மோற்சவ கொடியேற்றம்: மாட வீதியில் சுவாமி வீதியுலா

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்ராயண புண்ணியகால பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. சுவாமி மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் முக்கிய உற்சவங்கள், கொடியேற்றத்துடன் தொடங்குவது மரபு. அதன்படி கோயிலில் ஆண்டுக்கு 4முறை கொடியேற்றப்படுகிறது. கார்த்திகை தீபத் திருவிழா, ஆனி பிரம்மோற்சவம், மார்கழி மாதத்தில் உத்ராயண புண்ணியகாலம் மற்றும் ஆனி மாதத்தில் தட்சிணாயன காலம் ஆகியவற்றின் தொடக்கமாக, அண்ணாமலையார் சன்னதி முன் அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்படும்.  

இந்நிலையில், மார்கழி மாதத்தில் நடைபெறும் உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவ கொடியேற்றம் இன்று காலை நடந்தது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதையடுத்து விநாயகர், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் தங்க கொடிமரம் முன்பு எருந்தருளினர். இதைதொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, தங்க கொடிமரத்தில் கொடியேற்றினர். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

இதைதொடர்ந்து விநாயகர், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் மாடவீதியில் பவனி வந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மார்கழி மாதம்இறுதிவரை தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் சுவாமி வீதியுலா நடைபெறும். நிறைவாக 14ம் தேதி ஐயங்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதைதொடர்ந்து வரும் 15ம் தேதி பிரசித்தி பெற்ற திருவூடல் திருவிழாவும், 16ம் தேதி மறுவூடல் விழாவும் நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக தீபத்திருவிழா உள்பட முக்கிய விழாக்களின்போது சுவாமி  பவனி மாடவீதியில் நடைபெறவில்லை. அதற்கு மாற்றாக 5ம் பிரகாரத்தில் சுவாமி பவனி நடந்தது.

கொரோனா தொற்று பரவல் குறைந்ததாலும், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதாலும் கடந்த 30ம் தேதி நடந்த ஆருத்ரா தரினத்தின்போது நடராஜர் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைதொடர்ந்து தற்போது உத்ரயண புண்ணியகால பிரம்மோற்சவத்தில் சுவாமி மாட வீதியில் பவனி வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: