தொடர்மழையால் நீர் வரத்து அதிகரிப்பு: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 3,000 கனஅடியாக அதிகரிப்பு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 3,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று இரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை அதிகரிப்பின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து உயர தொடங்கியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரமான 24 அடியில் தற்போது 23 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு அளவை கடந்ததால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3வது முறையாக உபரி நீரானது திறக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கடந்த நவம்பர் 30ம் தேதி உபரி நீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து டிசம்பர் 3ம் தேதியும் உபரி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் 3வது முறையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீரானது திறக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டது. தொடர்மழையால் ஏரிக்கு நீர் வரத்து 6,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் 3,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோர மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து நீரில் அளவு குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வருவதால் வெளியேற்றப்படும் நீரின் அளவு ஆத்திகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல பூண்டி ஏரியில் இருந்து 2,970 கனஅடியும், செங்குன்றம் நீர்த்தேக்கத்தில் இருந்து 1,500 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Related Stories: