தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் வீடுதோறும் கழிவுநீர் உறிஞ்சுக்குழி அமைக்கும் திட்டம்-வரைபடத்துடன் அறிக்கை தயாராகிறது

வேலூர் : தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டுக்கும் தனிநபர் கழிவறை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல், திடக்கழிவு மேலாண்மை திட்டமும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் கிராம ஊராட்சிகளில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பிரச்னையால் ஏற்படும் சுகாதார சீர்கேடு பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது.

ஒரு காலத்தில் கிராமப்புறங்களில் வீட்டில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் வீட்டு தோட்டமாக பராமரிக்கப்படும் வீட்டின் கொல்லைப்புறத்திலோ அல்லது வீட்டின் பக்கவாட்டில் காலியாக விடப்பட்டுள்ள இடத்திலோ விடப்படும். இதன் மூலம் கழிவுநீர் மேலாண்மை பண்டைய காலத்தில் இருந்து கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

ஆனால் பெருகி வரும் மக்கள் தொகை உட்பட பல்வேறு காரணங்களால் கிராமப்புறங்களில் வீட்டுக்குவீடு மேற்கொள்ளப்பட்டு வந்த கழிவுநீர் மேலாண்மையில் சிக்கல் எழுந்தது. இதனால் கிராம ஊராட்சிகளில் சிமென்ட் சாலை, கழிவுநீர் கால்வாய் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. கழிவுநீர் கால்வாய்கள் மூலம் வெளியேற்றப்படும் வீடுகளின் கழிவுநீர் கிராமப்புற நீர்நிலைகளில் கொண்டு சேர்க்கப்பட்டன.இதனால் நீர்நிலைகள் மாசடையும் நிலைக்கு தள்ளப்பட்டன.

அதேபோல் கழிவுநீர் கால்வாய்களும் சரிவர தூர்வாரப்படாததால் தூர்ந்து போனதுடன், திட்டப்பணி சரியாக மேற்கொள்ளப்படாததால் காணாமல் போயின. இதனால் கிராம ஊராட்சிகளில் தனிநபர் கழிவறைகளை போன்று ஒவ்வொரு வீட்டுக்கும் கழிவுநீர் உறிஞ்சுக்குழி அமைக்க ஊராட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதற்கான நிதியுதவியும் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் வழங்கப்பட்டது. ஆனால் இது முழுமையாக பொதுமக்களை சென்றடையாததால், இப்பணியை 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கட்டாயமாக மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் உறிஞ்சுக்குழி இல்லாத வீடுகளின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு கிராம ஊராட்சி செயலாளரும் கிராமத்தின் வரைபடத்தை வீதிகளுடன் தயாரித்து உறிஞ்சுக்குழி இல்லாத வீடுகளின் எண்ணிக்கை, பள்ளிகள் உட்பட பொது பயன்பாட்டு கட்டிடங்களின் எண்ணிக்கை ஆகியவற்றுடன் அந்தந்த பிடிஓக்களிடம் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட உடன் கிராம ஊராட்சிகளில்  உள்ள வீடுகளில் உறிஞ்சுக்குழி ₹6 ஆயிரம் மதிப்பீட்டிலும், பள்ளிகள், பொதுபயன்பாட்டு கட்டிடங்களில் கழிவுநீரின் அளவுக்கு ஏற்ப நிதி ஒதுக்கீட்டிலும் 100 நாள் திட்டத்தின் கீழ் அமைக்கப்படுகிறது. இதற்கான நடவடிக்கையில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை இறங்கியுள்ளது.

Related Stories: