திடீர் உடல் நலக்குறைவு காரணமாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு சிகிச்சை

ஆற்காடு: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று திடீர் உடல்நலக்குறைவால் ஆற்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டங்கள் நடந்து வருகிறது. இதில், பொதுச்செயலாளர் துரைமுருகன் பங்கேற்று பேசி வருகிறார். அதன்படி, நேற்று வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்லேரி, கொண்டகுப்பம், மருதம்பாக்கம் ஆகிய பகுதிகளில் கிராம சபை கூட்டத்தில், துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். இதனை முடித்துக் கொண்டு, அக்ராவரம் வழியாக சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென காய்ச்சலால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் உடனடியாக ஆற்காடு அடுத்த மேல்விஷாரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவர் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் கூறினர். துரைமுருகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதை அறிந்து முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்து சென்றனர். இதையடுத்து, மாலை 6 மணியளவில் துரைமுருகன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை எம்பியும் அனுமதி: மயிலாடுதுறை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் (75). இவர் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே சீனிவாசநல்லூரை சேர்ந்தவர். திமுக ஒன்றிய செயலாளராகவும் இருந்து வருகிறார். இவர், நேற்றுமுன்தினம் மயிலாடுதுறையில் நடந்த மக்கள் கிராமசபை கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு மாலை வீட்டுக்கு சென்றார். சிறிது நேரத்தில் ராமலிங்கத்திற்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: