கும்பக்கரையில் குளிக்க அனுமதி தேவை-சுற்றுலாப்பயணிகள் வலியுறுத்தல்

பெரியகுளம் : தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே, மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநில சுற்றுலாப் பயணிகளும் வந்து குளித்து மகிழ்வர். குறிப்பாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் அருவியில் குளிப்பதற்காக ஐயப்பன், முருக பக்தர்கள் அதிகமாக வருவர். கொரோனாவால் கடந்த மார்ச் முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில், ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு குற்றாலம், ஒகேனக்கல் உள்ளிட்ட அருவிகளில் குளிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், கும்பக்கரை அருவியில் மட்டும் குளிப்பதற்கு தடை தொடர்கிறது. இதனால், அருவிக்கு வரும் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க, மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரி டேவிட் ராஜாவிடம் கேட்டபோது, ‘‘தேனி, திண்டுக்கல் கலெக்டர்கள் அனுமதி அளித்தவுடன், கும்பக்கரை அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர்’’ என்றார்.

Related Stories: