அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் வரும் 14ம் தேதி தொடக்கம்

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி வரும் 14ம் தேதி தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கோயிலை கட்டும் பணியை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையே, கோயில் அமைக்கப்படும் இடத்தில் 200 அடி ஆழத்தில் சரயு ஆற்றின் நீரோட்டம் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து ஐஐடி நிபுணர்கள் ஆய்வு செய்கின்றனர்.

இந்நிலையில், ஸ்ரீராம் ஜன்மபூமி தீரத் ஷேத்ரா அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் அளித்த பேட்டியில், ‘‘சரயு ஆற்றின் நீரோட்டம் இருக்கும் பிரச்னைக்கு இன்னும் ஒருவாரத்தில் தீர்வு காணப்படும். அதையடுத்து, கோயில் கட்டுமானப் பணி வரும் 14ம் தேதி தொடங்கப்பட உள்ளது. கட்டுமானத்தின் போது, கற்களுடன் காப்பரும் கலந்து கோயில் கட்டப்பட உள்ளது. இதன் மூலம் கோயில் மிக அதிகப்படியான உறுதித் தன்மையுடன் இருக்கும். காப்பர் கலப்பதால் கட்டுமான செலவு அதிகரிக்கும். மிர்சாபூரில் இருந்து கொண்டு வரப்படும் கற்கள் மூலம் தூண்கள் எழுப்பப்படும்’’ என்றார். 5 ஏக்கரில் கட்டப்படும் ராமர் கோயிலுக்காக ஏற்கனவே 70 சதவீத தூண்கள் தயாராக உள்ளன. 2023ம் ஆண்டு டிசம்பரில் கோயிலை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: