காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்னும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நகரின் பல இடங்களில் மழை பெய்ததால் குளிர்ந்த காற்று வீசுகிறது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை இருக்கும். ஆனால் ஜனவரி தொடங்கியும் வடகிழக்கு பருவமழை இன்னும் முடியவில்லை. காற்றின் திசை மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

இந்த மழை இன்னும் 3 நாட்களுக்கு நீடிக்கும் என தெரிகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், நாகை, அரியலுர், பெரம்பலூர், திருச்சி, கரூர், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதற்கிடையே வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி வருவதற்கான அறிகுறி காணப்படுகிறது.

இதனால் கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 4, 5-ந் தேதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதைத் தொடர்ந்து 6-ந் தேதியும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: