முருகன் பட்டு கூட்டுறவு சங்க பணியாளர்கள் நியமனத்தில் ஆளுங்கட்சியின் தலையீடு: நெசவாளர்கள் கூட்டமைப்பு புகார்

காஞ்சிபுரம்: அனைத்து பட்டு நெசவாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் பிரகாஷ், கைத்தறி மற்றும் துணிநூல்துறை இயக்குநர் கருணாகரனுக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது. காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தில் நிர்வாக இயக்குநராக தமிழரசி என்பவர் இருந்தவரை, சங்கத்துக்கு ஏற்பட்ட சீர்கேடுகளை களைந்து திறமையாக வழி நடத்தினார். மேலும் அனுபவம் உள்ள பணியாளர்களை, அவரவர் திறமைக்கு ஏற்ற பணியில் அமர்த்தினார். இதனால் சங்கம் அழிவு பாதையில் இருந்து மீண்டு வந்தது. இந்நிலையில் ஆளுங்கட்சியினரின் தலையீட்டால், நிர்வாக இயக்குநர் மாற்றப்பட்டார். இதை தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்ற நிர்வாக இயக்குநர், ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டப்பட்டவர்களை முக்கிய பொறுப்புகளில் அமர்த்தி வருகிறார்.  இதனால் சங்கம் மீண்டும் சீர்கெட்டுவிடும் நிலை உருவாகியுள்ளது. எனவே, பழைய நிர்வாக இயக்குநர் தமிழரசி நியமித்த பணியாளர்களை, பணியிடமாற்றம் செய்யாமல் சங்கத்தை முறையாக வழிநடத்த, தக்க அறிவுறுத்தலை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: