கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையால் குண்டும் குழியுமாக மாறிய ஸ்ரீபெரும்புதூர் - திருவள்ளூர் சாலை: வாகன ஓட்டிகள் அவதி

ஸ்ரீபெரும்புதூர்: கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையால் ஸ்ரீபெரும்புதூர் - திருவள்ளூர் சாலை குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே, இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான பன்னாட்டு தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் திருவள்ளூர் செல்ல பெரும்புதூர் - திருவள்ளூர் சாலையை பயன்படுத்துகின்றனர்.மேலும், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெரும்புதூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் கனமழை பெய்தது. அப்போது, சாலையில் ஆங்காங்கே மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால், ஸ்ரீபெரும்புதூர் - திருவள்ளூர் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இரவில் வேலை முடிந்து, பைக்கில் செல்லும் ஊழியர்கள், சாலையில் உள்ள பள்ளங்களில் சிக்கி கீழே விழுந்து படுகாயமடைந்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், ஸ்ரீபெரும்புதூர் - திருவள்ளூர் சாலையில் ஏற்பட்டுள்ள, பள்ளங்களை உடனடியாக ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: