பேரவையில் முதல்வர் எடப்பாடி அறிவித்தும் பலனில்லை பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் 1,400 தினக்கூலி ஊழியர்கள் பணிநிரந்தரம் எப்போது? குடும்பத்தை நடத்த முடியாமல் தவிக்கும் அவலம்

சென்னை: சட்டசபையில் முதல்வர் எடப்பாடி அறிவித்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் 1,400 தினக்கூலி ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்வது எப்போது? என்று எதிர்பார்ப்பில் பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். தமிழக பொதுப்பணித்துறையில் பாசன உதவியாளர், மின் பணியாளர், தூய்மை பணியாளர், அலுவலக உதவியாளர், காவலர், பிளம்பர், சுத்திகரிப்பாளர் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தினக்கூலி பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் தினக்கூலி அடிப்படையில் 150ம், மாத ஊதியம் 5 ஆயிரம் வரை மட்டுமே பெற்று வருகின்றனர். இந்த ஊதியத்தை கொண்டு அவர்களால் குடும்பம் நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

எனவே, 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர்.

இதையேற்று கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்த 3345 பேருக்கு பணிவரன்முறை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த 1400 பேர் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இது தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சி துணை தலைவர் துரை முருகன் கேள்வி எழுப்பினார். இதற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கையில் 1400 பேர் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த 1140 பேர் பணிநிரந்தரம் செய்வது தொடர்பாக பட்டியலை பொதுப்பணித்துறை சார்பில் அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்த சூழலில் திடீரென தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து செயலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில், தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யக்கூடாது என்றும், அதையும் மீறி இது தொடர்பாக அறிக்கை அனுப்பினால், அந்த அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இது தினக்கூலி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பொதுப்பணித்துறை அரசு செயலாளர் மணிவாசனை, பொதுப்பணித்துறை களப்பணியாளர்கள் சங்கம் சார்பில் நேரில் சந்தித்து தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கோரிக்கை வைத்தனர். அப்போது, தினக்கூலி ஊழியர்கள் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று மணிவாசன் தெரிவித்தார். ஆனால், தற்போது வரை இதற்கான கோப்புக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. இந்த சூழலில் தினக்கூலி ஊழியர்கள் தாங்கள் பணிநிரந்தரம் ெசய்யப்படுவோமோ, இல்லையா என்பது தெரியாமல் குழப்பதில் உள்ளனர்.

Related Stories: