அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்கான காலணி கொள்முதல் டெண்டர் அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு காலணிகள் கொள்முதல் செய்வது தொடர்பான டெண்டரை எதிர்த்து தொடரப்பட்ட மனுவுக்கு தமிழ்நாடு பாடநூல் கழகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு 2020-21ம் கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கான காலணிகள் கொள்முதல் செய்ய, தமிழ்நாடு பாடநூல் கழகம் கடந்த மார்ச் மாதம் டெண்டர் கோரியது. இந்த டெண்டருக்கு தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பித்தும், எந்த காரணமும் தெரிவிக்காமல் தங்கள் நிறுவனத்தை  தகுதி நீக்கம் செய்து தமிழ்நாடு பாடநூல் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறி, அரியானாவை சேர்ந்த பிஎன்ஜி பேஷன் கியர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குறைந்த தொகையை குறிப்பிட்டிருந்த தங்கள் நிறுவனத்தை தகுதி நீக்கம் செய்து விட்டு, பேட்டா நிறுவனத்துக்கும், பவர்டெக் எலெக்ட்ரோ இன்ப்ரா என்ற நிறுவனத்துக்கும் பணிகள் வழங்க இருப்பதாகவும் அதற்கு தடை விதித்து தங்களுக்கு டெண்டர் ஒதுக்க வேண்டும் என்றும் மனுதாரர் நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

* அரசு பள்ளி மாணவர்களுக்கான காலணிகள் கொள்முதல் செய்ய, தமிழ்நாடு பாடநூல் கழகம் கடந்த மார்ச் மாதம் டெண்டர் கோரியது.

* டெண்டருக்கு தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பித்தும், எந்த காரணமும் தெரிவிக்காமல் தங்கள் நிறுவனத்தை தகுதி நீக்கம் செய்துள்ளனர் என பிஎன்ஜி பேஷன் கியர்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

Related Stories: