நட்சத்திர ஓட்டல் ஊழியர்களுக்கு கொரோனா சோதனை கட்டாயம்: ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டல் பணியாளர்கள் 85 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் தமிழக சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டல் ஊழியர்கள் 85 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால், நகரில் உள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல் ஊழியர்களும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. நேற்று முதல் பரிசோதனைகளும் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. தற்போது தமிழகத்தில் தினசரி நோய் பாதிப்பு 1000க்கும் குறைவாகவே உள்ளது. சென்னையில் 250க்கும் குறைவாகவே இருந்தது. இதனால் அரசும், விரைவில் தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தி விடலாம் என்று கருதியது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 1ம் தேதியில் இருந்து கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் வகுப்புகளுக்கு வரலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகம், சென்னை அடையாறு ஐஐடி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகள் திறக்கப்பட்டன.

இதில் அடையாறு ஐஐடி கல்லூரி விடுதி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மாணவர்கள் அனைவருக்கும் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டது. 1000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, மாணவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டல் ஊழியர்கள் 85 பேருக்கு நேற்று முன்தினம் வரை கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஐடிசி ஓட்டலில் சமையல் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த ஓட்டலில் வருகிற 10ம் தேதி வரை எந்த நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது என்று சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டல் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய தமிழக சுகாதாரத்துறை நேற்று முன்தினம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை, கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் சமையல் பிரிவில் உள்ள 5 பேருக்கு கடந்த டிசம்பர் 15ம் தேதி கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இது படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் வரை 85 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், தற்போது சிகிச்சைக்காக சென்னையில் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த ஓட்டலில் பணியாற்றும் சுமார் 625 ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதித்துள்ள ஊழியர்களின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கும் பரிசோதனை செய்துள்ளோம்.

டிசம்பர் 21 மற்றும் 22ம் தேதி டெல்லியில் இருந்து வந்த தலைமை தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இந்த ஓட்டலில்தான் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தமிழகத்தில் இருந்து கலெக்டர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் அரசியல் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அவர்களின் உடல்நிலையையும் பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஓட்டலில் கடந்த மாதம் வரை நிகழ்ச்சிகள் நடந்துள்ளது. அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஓட்டலில் பணியாற்றும் சமையல் ஊழியர்கள் பங்கேற்றுள்ளதால் மிகவும் எச்சரிக்கையுடன் இதை கையாண்டு வருகிறோம். தற்போது 10ம் தேதி வரை இந்த ஓட்டலில் எந்த நிகழ்ச்சியும் நடத்த வேண்டாம் என்று மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள நம்பர் ஒன் ஓட்டலில்

அதிக அளவில் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், சென்னை மற்றும் புறநகரில் உள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்களிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா என்று சோதனை நடத்த சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோன்று, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்களில் பணியாற்றும் சமையல் ஊழியர்கள் உள்பட அனைவருக்கும் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை எடுக்க சுகாதாரத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி நேற்று அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனையும் எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை முடிவில், நெகட்டிவ் (தொற்று இல்லை) என்று வந்தால் மட்டுமே ஓட்டலில் பணி செய்ய ஊழியர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் ஓட்டல் நிர்வாகத்திடம் கண்டிப்புடன் கூறப்பட்டுள்ளது. காரணம், நட்சத்திர ஓட்டல்களில் விவிஐபிக்கள் மற்றும் வெளிநாட்டினர் வருகை அதிகளவில் உள்ளதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது.

 தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால், ஓட்டல்களில் கிருமி நாசினி அடிப்பது மற்றும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாள்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதனால் முன்பு இருந்ததுபோன்று, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து ஓட்டல்களிலும் மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்றும் சமூக இடைவெளி, மாஸ்க் அணிவதை கட்டாயப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.

* சென்னையில் உள்ள நம்பர் ஒன் ஓட்டலில் அதிக ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

* சென்னை மற்றும் புறநகரில் அனைத்து நட்சத்திர ஓட்டல்களிலும் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்தால் மட்டுமே ஊழியர்களை அனுமதிக்க வேண்டும்.

Related Stories: