முழுமையாக இயக்கப்படாத மாநகர பேருந்துகள் சிக்னல் பிரச்னையால் முடங்கி கிடக்கும் மாதவரம் மாடி பேருந்து நிலையம்

சிக்னல் பிரச்னையால் மாதவரம் மாடி பேருந்து நிலையம் மூடப்பட்டுள்ளது. மாநகர பேருந்துகள் முழுமையாக இயக்கப்படாததால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாதவரம் மேம்பாலம் அருகே உள்ள சிஎம்டிஏ வளாகத்தில் ஆந்திரா செல்லும் பஸ்களுக்கான பேருந்து நிலையம் 100 கோடி செலவில் கட்டப்பட்டது. இங்கிருந்து  திருப்பதி, காளகஸ்திரி, நெல்லூர் போன்ற ஆந்திரா மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு 1,200 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல்  தாம்பரம், கோயம்பேடு உயர் நீதிமன்றம், வேளச்சேரி போன்ற பகுதியில் இருந்து வரக்கூடிய பயணிகளின் வசதிக்காக 26 பேருந்துகளும் மற்ற பேருந்து நிலையங்களில் இருந்து இங்கு வந்து செல்லக்கூடிய 79 பேருந்துகள் என மொத்தம் 105 மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அரசின் திட்டப்படி தினமும் சுமார் 12,500 பயணிகள் பயன்படுத்தவும் 315 பேருந்து போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டது.

இதற்காக  மேல்தளத்தில் 50 பேருந்துகளை நிறுத்தவும்.  கீழ்தளத்தில் பிற பேருந்துகள் மற்றும் 1, 700 பைக், ஸ்கூட்டர்கள், 72 கார்கள் நிறுத்தும் வசதியும் உண்டு. இந்த நிலையில்  கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்த ஆந்திரா செல்லும் பேருந்து நிலையம் மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோயம்பேடு பழ  மார்க்கெட் தற்காலிகமாக இந்த பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் டிசம்பர் மாதம் 25ம் தேதி முதல் மீண்டும் பேருந்து நிலையம் செயல்பட தொடங்கியது.  ஆனால் இங்கிருந்து பேருந்துகளை முழுமையாக இயக்க முடியவில்லை. இதனால் சென்னையின் பிரதான பகுதியில் இருந்து ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்துக்கு செல்லக் கூடியவர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். காரணம், மாதவரம் பேருந்து நிலைய பிரதான வாயிலில் உள்ள கதவுகள் பூட்டியே கிடக்கிறது. இதனால் அனைத்து பேருந்துகளும் சிஎம்டிஏ வாகன நிறுத்த மைய வளாகத்தில் உள்ள கேட் வழியாக வந்து செல்கின்றன. இவ்வாறு ஒரே பாதையில் பேருந்துகள் சென்று வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

இதனால்  பேருந்து நிலைய முன்பக்க கதவை திறந்து விடவேண்டும், மாநகரப் பேருந்துகளை முழுமையாக இயக்க வேண்டும் என்று பயணிகள் போக்குவரத்து துறை அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் 100 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஆந்திரா பேருந்து நிலையம் முழுமையாக பயன்படுத்த முடியாமல் முடங்கிக் கிடக்கிறது.  இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:  சென்னையில் உள்ள பிரதான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மாநகர பேருந்தில் பயணம் செய்து ஆந்திரா பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கிருந்து தான்  வெளியூருக்கு செல்வோம். ஆனால் தற்போது இந்த மாநகர பேருந்து இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது .இதனால் இந்த வழியாக செல்லக்கூடிய மாநகரப் பேருந்தில் வரும் நாங்கள் மாதவரம் டி என் டி சாலையில் வந்து இறங்கி அங்கிருந்து சாலையை கடந்து பின்னர் ஆந்திரா பேருந்து நிலையத்திற்கு சென்று வெளி மாநிலத்துக்கான பேருந்தில் செல்ல வேண்டி உள்ளது.

இவ்வாறு சாலையை கடக்கும் போது வேகமாக வரக்கூடிய வாகனங்கள் மோதி பலர் உயிரிழந்துள்ளனர். ஆந்திரா பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை குறைக்க சிக்னல் அமைக்க வேண்டும் என்று போக்குவரத்து அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

சிக்னலால் சீர்படுத்த முடியாது

சென்னை மாநகர போக்குவரத்து அதிகாரியிடம் கேட்டபோது “ஆந்திரா பேருந்து நிலையத்தை சுற்றி எட்டு வழி பாதைகளில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசலை,விபத்தை தடுக்க இந்த முன்பக்க கதவு மூடப்பட்டிருக்கிறது. ஆனாலும் பேருந்துகள் ஆந்திரா பேருந்து நிலையத்திற்கு எளிதாகவும் விபத்தில்லாமல் செல்வதற்காக ஆந்திரா பேருந்து நிலையத்தை ஒட்டி புதிய கேட் ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த சாலைகளில் ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால் சிக்னலை அமைத்து அதை செயல்படுத்துவது என்பது நடைமுறைக்கு ஒத்துவராது .அவ்வாறு அமைத்தால் தற்போதுள்ள போக்குவரத்து நெரிசல் இன்னும் கூடுதல் ஆகி விடும். அதனால் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்” என்றார்.

எம்டிசி பஸ் முழுமையாக இயங்கும்

சென்னை சிஎம்டிஏ அதிகாரிகள் கூறுகையில்,‘‘மாநகர பேருந்தை முழுமையாக இயக்குவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். இன்னும் ஒரு சில தினங்களில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைத்து மாநகரப் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும்”  என்றனர். பல கோடி செலவில் கட்டபட்ட பேருந்து நிலையத்தை காட்சி பொருளாக வைத்து இருக்காமல் சிக்னல் பிரச்னையை சரி செய்து பேருந்துகளை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: