நீர் கடத்தும் திறன் பாதிப்பால் தண்ணீர் வீணாவதை தடுக்க சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் கால்வாய்களை சீரமைக்க முடிவு: கடனுதவி மூலம் பணிகளை தொடங்க திட்டம்

சென்னை:  சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை மற்றும் தேர்வாய்கண்டிகை ஆகிய 5 ஏரிகள் விளங்குகிறது.  இந்த ஏரிகள் மூலம் தான் சென்னை மாநகருக்கு தினசரி 60 கோடி லிட்டர் வரை தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கிருஷ்ணா நீர் வரும் போது, சென்னை மாநகரின் குடிநீருக்காக பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திருப்பி விடப்படுகிறது. இதற்காக கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் வழியாக தான் இரண்டு ஏரிகளுக்கும் தண்ணீர் செல்கிறது.  இந்த நிலையில், அந்த கால்வாய்களை முறையாக பாரமரிக்காததால் பல இடங்களில் சேதமடைந்துள்ளது. இதனால் நீர்கடத்தும் திறன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 200 கன அடி வீதம் கால்வாயில் தண்ணீர் திறந்து விட்டால் 110 கன அடி நீர் ஏரிக்கு சென்று சேருவதே மிகவும் சிரமமாக உள்ளது. இதனால், பல கன அடி நீர் வீணாகும் நிலைதான் உள்ளது.

இதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை குடிநீர் தேவையை கடத்தி செல்லும் கால்வாய்களை சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க ெபாதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், சென்னை மண்டல நீர்வளப்பிரிவு  தலைமை பொறியாளர் அசோகன், கண்காணிப்பு பொறியாளர் முத்தையா உள்ளிட்ட பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் கால்வாய் புனரமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பூண்டியில் ஏரியில் இருந்து புழல் ஏரியை இணைக்கும் பேபி கால்வாய் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய் நூறு அடி அகலம் மற்றும் 15.65 கி.மீ நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 30 முதல் 40 அடியாக சுருங்கி விட்டது. பேபி கால்வாயின் கரையின் பல பகுதிகள் சேதமடைந்துள்ளது. அதே போன்று, பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரி வரை 25 கி.மீ தூரத்துக்கு இணைப்பு கால்வாய் பல இடங்களில் சேதமடைந்துள்ளது.  இதனால், 2 கால்வாய்களிலும் நீர் கடத்தும் திறன் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த கால்வாய்களில் ஆக்கிரமிப்பை அகற்றி, கால்வாய்களை மீண்டும் மறுசீரமைப்பு செய்யும் பணி மேற்கொள்ளும் வகையில் திட்ட அறிக்கை தயார் செய்யப்படுகிறது. இந்த கால்வாயை சீரமைப்பதற்கான நிதியை நீர்வள ஆதாரங்களை சீரமைத்தல் மற்றும் பாதுகாத்தல் கழகம் மூலம் கடனுதவியாக பெறப்பட்டு பொதுப்பணித்துறை மூலம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: