நிலுவை ஆவணங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, வருவாய் குறைவு எதிரொலி: சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவுத்துறை ஐஜி சங்கர் ஆய்வு: தஞ்சையில் 5ம் தேதி, கடலூரில் 8ம் தேதி செல்கிறார்

சென்னை: தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்படும் ஆவணங்களில் உடனடியாக திருப்பி தருவதில்லை என் புகார் எழுந்தது. இதை தொடர்ந்து பதிவு செய்த அன்றைய தினமே ஆவணங்கள் திருப்பி தரப்படுகிறதா, இல்லையா என்று ஐஜி சங்கர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். இதனால், 90 சதவீதம் ஆவணங்கள் அன்றைய தினமே திருப்பி தரப்படுகிறது. இருப்பினும், பல மாதங்களாக பல்வேறு காரணங்களால் நிலுவை ஆவணங்களாக வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, களப்பணி மேற்கொள்ளப்பட வேண்டிய ஆவணங்கள், மதிப்பு நிர்ணயம் செய்ய வேண்டிய ஆவணங்கள் எனக்கூறி, நீண்ட நாட்களாக நிலுவையில் ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனால், பதிவுத்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், சார்பதிவாளர் அலுவலகங்களில் வருவாய் இலக்கு நிர்ணயம் செய்தாலும் அவற்றை அடைய முடியாமல் தவிக்கிறது. குறிப்பாக, பல சார்பதிவாளர் அலுவலகங்களில் இலக்கு நிர்ணயித்தாலும், குறைந்த வருவாய் மட்டுமே கிடைக்கிறது.

இந்த நிலையில் உண்மை தன்மையை கண்டறியும் வகையில் சார்பதிவாளர் அலுவலகங்களில் 4 கூடுதல் ஐஜி, 9 டிஐஜி கொண்ட குழு 3 நாட்கள் ஆய்வு செய்தது. அந்த ஆய்வின் அறிக்கையை பதிவுத்துறை ஐஜி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பதிவுத்துறை ஐஜி சங்கர் மண்டலம் வாரியாக ஆய்வு செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. அதன்படி வரும் 5ம் தேதி தஞ்சாவூர் மண்டலம், 6ம் தேதி கடலூர் மண்டலங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆய்வு செய்கிறார்.  தொடர்ந்து ஒவ்வொரு மண்டலமாக ஆய்வு செய்யவிருக்கிறார். இந்த ஆய்வின் போது வருவாய் குறைவாக உள்ள அலுவலகங்கள், நிலுவையில் உள்ள ஆவணங்கள் தொடர்பாக சார்பதிவாளர் அலுவலர்களிடம் விளக்கம் கேட்க பதிவுத்துறை ஐஜி திட்டமிட்டு இருப்பதாக பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரவித்தார்.

Related Stories: