முதல்வர் இன்று வருகை கமுதி தனி மாவட்ட அறிவிப்பு வெளியாகுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சாயல்குடி : ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தேர்தல் பிரசாரம் செய்ய வருகை தருகிறார்.

அவருக்கு மாவட்ட மக்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் வருமாறு: தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ராமநாதபுரம், பட்டணம்காத்தான், அச்சுந்தன்வயல், சக்கரகோட்டை, சூரன்கோட்டை ஆகிய பஞ்சாயத்துகளை ராமநாதபுரம் நகராட்சியுடன் இணைத்து சிறப்பு நகராட்சியாக தரம் உயர்த்துவது, முதுகுளத்தூர்- கடலாடி வழித்தடத்தில் சுற்றுச்சாலை அமைப்பது, ராமநாதபுரம், திருவாடானை, முதுகுளத்தூர் தொகுதிகளை சேர்ந்த 543 கிராமங்கள் பயன்படும் வகையில் சாயல்குடி அருகே குதிரைமொழியில் ரூ.675 கோடியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை துவங்குவது, முதுகுளத்தூர், கமுதி பகுதியில் விவசாய பொருட்களை பாதுகாக்கக்கூடிய குளிரூட்டும் மையம் அமைப்பது, கமுதி, சாயல்குடி, அபிராமம் வாரச்சந்தைகளை அபிவிருத்தி செய்வது, ரூ.14 கோடி மதிப்பீட்டில் காவிரி- குண்டாறு இணைப்பு பணியை துவங்குவது, கடலாடி அருகே ஏ.உசிலங்குளம், குருப்கூரான்கோட்டை பகுதியில் குண்டாறு குறுக்கே மழைநீரை சேமிக்க தடுப்பணை கட்டுவது உள்ளிட்ட திட்டங்கள் கிடப்பில் கிடக்கின்றன. இவற்றை உடனே துவங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் ராமநாதபுரம் மாவட்டம் 11 யூனியன்கள், 9 தாலுகாக்களை கொண்ட பெரிய மாவட்டமாக உள்ளது. இதில்  கடலாடி ஒன்றியத்தில் 60, முதுகுளத்தூர் ஒன்றியத்தில் 46, கமுதி ஒன்றியத்தில் 53 என மொத்தம் 159 கிராம பஞ்சாயத்துகளை உள்ளிடக்கி, முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியாகவும் உள்ளது. இதேபோல் பாராளுமன்ற தொகுதியின் எல்லை விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி, நரிக்குடி வரையிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் உச்சிநத்தம் வரையிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி வரையிலும் பரந்து விரிந்துள்ளது. இப்பகுதிகளில் உள்ளவர்கள்

ராமநாதபுரம் வந்து செல்ல சுமார் 100 கிமீ முதல் 120 கிமீ தூரத்திற்கு அதிகமாக உள்ளது.

இப்பகுதிகளில் மழையை மட்டுமே நம்பி செய்யப்படும் விவசாயம் மட்டுமே நடப்பதால் பிற தொழில் வளங்கள் கிடையாது. போக்குவரத்து, வணிகம், மருத்துவம், கல்வி போன்ற அனைத்து முக்கிய வசதிகள் இப்பகுதியினருக்கு எட்டா கனியாக உள்ளது. இதனால் பொருளாதரம் உள்ளிட்ட அனைத்திலும் மிகவும் பின்தங்கி வறுமைகோட்டிற்கு கீழ் நிலையியே பெரும்பாலான கிராமமக்கள் உள்ளனர்.  

மேலும் இப்பகுதியில் அடிக்கடி சட்ட ஒழுங்கு பிரச்னைகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே திருச்சுழி, கடலாடி, சாயல்குடி, முதுகுளத்தூர்,  பார்த்திபனூர், கமுதி பகுதிகளை இணைத்து கமுதியை  தனிமாவட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்க வேண்டும். மேலும் முதுகுளத்தூர், திருவாடானை, பரமக்குடியில் உள்ள அரசு கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகள், கடலாடியில் ஒருங்கிணைந்த பஸ்நிலையம், புதிய நீதிமன்ற கட்டிடம், அரசு ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கடல்சார்ந்த மாவட்டம் என்பதால் மீன்வள படிப்புகளுடன் மீன்வள கல்லூரி, கிராம இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு புதிய தொழிற்சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட அறிவிப்புகளை முதல்வர் வெளியிட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Related Stories: