தமிழகத்தில் தொற்று குறைந்து வரும் நிலையில் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஊழியர்கள் 50 பேருக்கு கொரோனா: 10ம் தேதி வரை நிகழ்ச்சிகள் நடத்த மாநகராட்சி தடை

சென்னை: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா நோய் தொற்று பரவலாக குறைந்து வருகிறது. தமிழக அரசும் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனால் இயல்பு நிலை திரும்பியுள்ளதால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம், இங்கிலாந்து நாட்டில் இருந்து பரவும் உருமாறிய கொரோனா தமிழகத்தில் நுழையாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஓட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சென்னையில் மியாட் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த ஓட்டல் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “சென்னையில் தற்போது கொரோனா பாதிப்பு நன்றாக குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு 300க்கும் குறைவாகவே உள்ளது. இந்த நிலையில் சென்னை, கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதி ஊழியர்கள் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது மாநகராட்சி அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் அவர்களுக்கு லேசான கொரோனா அறிகுறியே உள்ளது.

இந்த ஓட்டலில், சமையல் பிரிவில் வேலை செய்யும் ஊழியர்களே தினசரி பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினசரி ஐந்து ஐந்து ஊழியர்கள் என கடந்த 10 நாட்களில் இதுவரை 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதால், இந்த ஓட்டலில் வருகிற 10ம் தேதி வரை எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே புக்கிங் செய்யப்பட்ட நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்” என்றார்.

சென்னையில் உள்ள இந்த பிரபல நட்சத்திர ஓட்டலில் வருகிற 10ம் தேதி வரை பலரும், ரூம் மற்றும் ஹால் புக் செய்து இருந்தனர். தற்போது திடீரென நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

காரணம், இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு வெளிநாட்டில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமானவர்கள் சென்னை வருவதற்காக விமானம், ரயில், பஸ்களில் முன்பதிவு செய்து இருந்தனர். தற்போது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால் அவர்களுக்கு பெரிய அளவில் பணம் இழப்பும், திருமண வரவேற்பு உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: