மாநில வரித்துறை கோட்ட இணை ஆணையரின் காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி வீடுகளில் அதிரடி ரெய்டு

வேலூர்: வேலூரில் உள்ள மாநில வரித்துறை கோட்ட இணை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியதை தொடர்ந்து, அவரது காஞ்சி, கிருஷ்ணகிரியில் உள்ள வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.

வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் மாநில வரித்துறையின் வேலூர் கோட்ட இணை ஆணையர் (செயலாக்கம்) அலுவலகம் உள்ளது. இணை ஆணையராக விமலா(42) உள்ளார். இவர் பொதுநிர்வாகம், நுண்ணறிவு பிரிவையும் கூடுதலாக கவனித்து வருகிறார். இவரது அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை லஞ்சஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத 1.50 லட்சம் பணம் மற்றும் சால்வைகள், பரிசு பொருட்களை பறிமுதல் செய்தனர்.  மாலை 6 மணிக்கு தொடங்கிய ரெய்டு நள்ளிரவு 12 மணியளவில் நிறைவடைந்தது. இதையடுத்து இணை ஆணையர் விமலாவுக்கு சொந்தமான கிருஷ்ணகிரி மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள வீடுகளிலும் நேற்று காலை முதல் அந்தந்த மாவட்ட லஞ்சஒழிப்புத்துறை போலீசார் மூலம் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மேலும் முக்கிய ஆவணங்கள் சிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

பரிசு பொருட்களாக பாதாம், பிஸ்தா, முந்திரி

மாநில வரித்துறையின் வேலூர் கோட்ட இணை ஆணையராக விமலா பதவியேற்று, 2 ஆண்டுகள் ஆகிறது. நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் பரிசு பொருட்களாக கிலோ கணக்கில் பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்டவை வாங்கி வைத்துள்ளது தெரியவந்தது. மேலும் பரிசு பொருட்களாக வைட்டமின் நிறைந்த உயர்தர உலர் பழங்கள் வழங்க வேண்டும் என்று இணை ஆணையர் கூறியதாக தெரிகிறது. இதனால் அலுவலகத்திற்கு வருபவர்கள் பாதாம், பிஸ்தா உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை வாங்கி வருவது வழக்கம் என கூறப்படுகிறது.

Related Stories: