ஆன்மிக சுற்றுலா தலமான திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் ஆறாக செல்லும் கழிவுநீர்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயில் வளாக பகுதியில் நாழிக்கிணறுக்கு செல்லும் வழியில் குளியல் அறையிலிருந்து கழிவுநீர் ஆறாக ஓடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் முகம் சுளித்தவாறு செல்கின்றனர். அறுபடை வீடுகளில் 2ம்படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

மேலும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பாதயாத்திரை பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். தினமும் காலை 6  முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கடலில் புனித நீராடவும் அனுமதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஆனால் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லையெனக் கூறப்படுகிறது.

பக்தர்கள் கடலில் புனித நீராடியபின் மொட்டை போடும் இடத்திற்கு அருகிலுள்ள குளியல் அறையில் குளிக்கின்றனர். ஆனால் அங்கு சரியான வாறுகால் வசதி செய்யப்படாததால் அதிலிருந்து வெளியேறும் கழிவுநீர், ஆறாக ஓடி நாழிக்கிணறுக்கு செல்லும் பாதை வழியாகச் சென்று கடற்கரைக்கு செல்கிறது.  இதனால் அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அவ்வழியாகச் செல்லும் பக்தர்கள் மூக்கை பிடித்தபடி முகம் சுளித்தவாரே செல்கின்றனர். மேலும் அப்பகுதியில் பாசிபடர்ந்து காணப்படுவதால் முதியவர்கள் வழுக்கி விழுகின்றனர். எனவே கோயில் நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கடற்கரைக்கு செல்லாத வண்ணம் வாறுகால் வசதி ஏற்படுத்தி சுகாதாரத்தை பேண வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாகும்.

Related Stories: