நெல்லையப்பர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்: இன்று அதிகாலை நடந்தது

நெல்லை: நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழா கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கடந்த 21ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி, அம்பாள், நடராஜர், சிவகாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார, தீபாராதனை நடந்தது. 9ம் திருநாளான நேற்று தாமிரசபையில் நடராஜருக்கு திருநீராட்டு அபிஷேகம் நடந்தது.

திருவிழாவின் சிகரமாக நடராஜரின் ஆருத்ரா தரிசனத்தை காண இன்று அதிகாலை முதலே பக்தர்கள் குவியத் துவங்கினர். அதிகாலை 3 மணிக்கு பசு தீபாராதனை, தொடர்ந்து நடராஜரின் திருநடன காட்சியான ஆருத்ரா தரிசனமும் நடந்தது. இதை நெல்லை மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசித்தனர்.

இதேபோல் பாளை திரிபுராந்தீஸ்வரர் கோயில், வண்ணார்பேட்டை அருணாசலேஸ்வரர் கோயில், சந்திப்பு கைலாசநாதர் கோயில், சொக்கநாதர் கோயில், தச்சநல்லூர் நெல்லையப்பர் கோயில், குறிச்சி சொக்கநாதர் கோயில், டவுன் தொண்டர்கள் நயினார் சன்னதி கோயில் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசனத்தை பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசித்தனர்.

Related Stories: