பயோகேஸ் பிளாண்ட் மூலம் குருமாம்பேட் குப்பை கிடங்கில் மின்சாரம் தயாரிப்பு: 12 கிலோவாட் ஜெனரேட்டர் நிறுவப்படுகிறது

வில்லியனூர்: புதுச்சேரி குருமாம்பேட் பகுதியில் நகரம் மற்றும் கிராமங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் டன் கணக்கில் கொட்டப்படும் குப்பைகளால் ஆன செயற்கை மலைகள் உருவாகிவிட்டது. இதனை மறு சுழற்சி செய்யவும், மாற்று எரிபொருள் சக்தியாக மாற்றவும் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் மார்க்கெட் பகுதிகளில் சேகரிக்கப்படும் அழுகிப்போன காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை குப்பையோடு குப்பையாக கொட்டாமல் இதனை வைத்து மின்சாரம் தயாரிக்க அரசு சார்பில் கடந்த 2018ம் ஆண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி புதிதாக பயோ மீத்தேன்ஸ்சேஷன் என்ற கேஸ் பிளாண்ட் திறக்கப்பட்டு அழுகிய காய்கறிகள் மற்றும் பழங்களை ஒரு இயந்திரத்தில் போட்டு கூழாக்கி அதனை ஒரு கண்டெய்னரில் வைத்து பாக்டீரியா மூலம் நொதித்தல் வினைக்கு உட்படுத்தி பெரிய டேங்கரில் சேமிக்கப்படுகிறது. பிறகு அதிலிருந்து குழாய் மூலமாக கேஸ் எடுத்து மின்சாரமாக மாற்றி அங்குள்ள மின்விளக்குகளை எரிய பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இதனை மேலும் விரிவுபடுத்தி 12 கிலோவாட் திறன் கொண்ட ஜெனரேட்டரை இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா சூழலில் அந்த திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

தற்போது அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்த திட்டம் ெசயல்படுத்தப்படவுள்ளதாக உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் குப்பை கிடங்கில் உள்ள அனைத்து எல்இடி மின்விளக்குகள் மற்றும் காய்கறிகளை கூழாக்கும் இயந்திரம் போன்றவற்றை சிறிதும் மின்சார செலவுமின்றி இயக்குவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதன்மூலம் மின்சாரத்தையும் சேமித்துக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: