மகளிர் ஆணைய உறுப்பினர் பதவிக்கு லஞ்சப் புகார்; மத்திமைச்சர் ஸ்மிருதி பதவி விலக வேண்டும்...காங். செய்தி தொடர்பாளர் வலியுறுத்தல்

புதுடெல்லி: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவிக்கு லஞ்சம் கேட்டதாக எழுந்த விவகாரத்தில் அமைச்சர் ஸ்மிருதி இரானி பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வலியுறுத்தி உள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தை  சேர்ந்த துப்பாக்கி சுடும் வீராங்கனை வர்திகா சிங் என்பவர், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அவரது உதவியாளர், மருத்துவர் என, 3 பேர் மீது கடந்த சில நாட்களுக்கு முன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். தேசிய மகளிர் ஆணைய  உறுப்பினர் பதவிக்கு பல லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக அவர் குற்றம்சாட்டி இருந்தார். இவர்களுக்கு எதிராக உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.

அதேநேரம், ஸ்மிருதி இரானி தரப்பில், வீராங்கனை வர்திகா சிங்குக்கு எதிராக அவதூறு பரப்பியதாக போலீஸ் வழக்கும், நீதிமன்ற வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்  ரன்தீப்  சுர்ஜேவாலா கூறுகையில், ‘மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீது லஞ்சப் புகார் கூறப்பட்டுள்ளதால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஸ்மிருதி இரானிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தீவிரமானதாக பார்க்க வேண்டும்.  சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். பிரதமர் மோடி, நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

ஸ்மிருதி இரானி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நியாயமான விசாரணைக்கு முன்வர வேண்டும். இதில் உண்மை என்னவென்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் விசாரணை நடைபெறும் வரை ஸ்மிருதி இரானி பதவியில்  தொடரக்கூடாது. பிரதமர் மோடி நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டால், ஆறு மாதங்களில் அறிக்கை வந்துவிடும். அதன்பின், ஸ்மிருதி இரானி குற்றவாளி என்றால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள். குற்றவாளி இல்லையென்றால்,  தவறான புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். அதன்பின், ஸ்மிருதி இரானியை மீண்டும் அமைச்சராக்க நியமியுங்கள்’ என்று தெரிவித்தார்.

Related Stories: