ஆங்கில புத்தாண்டுக்கு ரூ.620 கோடி மதுவிற்பனை செய்ய ‘டார்க்கெட்’: டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்

சென்னை: ஆங்கில புத்தாண்டுக்கு ரூ.620 கோடி மதுவிற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் கடைகள் மூலம், நாள்தோறும் ரூ.80 முதல் ரூ.90 கோடி வரையில் மதுவிற்பனை நடைபெறுகிறது. இதுவே புத்தாண்டு, பொங்கல் மற்றும் விடுமுறை தினங்களில் இரட்டிப்பாகும். அதை உறுதிசெய்யும் வகையில் 2020ம் ஆண்டு புத்தாண்டு பண்டிகையின்போது ரூ.315 கோடி மதுவிற்பனையானது. 2019ம் ஆண்டு புத்தாண்டைவிட இது 11 சதவீதம் அதிகம். இந்தநிலையில், கொரோனா காரணமாக மது கடை மூடப்பட்டது.

இதனால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வில் டாஸ்மாக் திறக்கப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளியன்று 2 நாளில் ரூ.465 கோடிக்கு மது விற்பனையானது. இந்தநிலையில், 2021ம் ஆண்டு புத்தாண்டு பண்டிகை வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. புத்தாண்டை முன்னிட்டு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. இதனால், டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை வழக்கத்தை விட அதிகமாக காணப்படும். எனவே, இந்த ஆண்டு புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ரூ.620 கோடிக்கு மதுவிற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது என்று டாஸ்மாக் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 

Related Stories: