மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி உட்பட பல்வேறு நிபந்தனைகளுடன் தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் பார்கள் திறப்பு: 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தலாம்; அரசு அனுமதி

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் கடந்த மே 7ம் தேதி முதல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால், டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களை திறக்க அரசு அனுமதி கொடுக்கவில்லை. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்ட நிலையில், பார்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று பார் உரிமையாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இன்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை திறக்க பல்வேறு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் நிறுவனம் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பாரில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பார்களில் இருக்கும் போது சமூக இடைவெளி கடைபிடித்தல், முககவசம் அணிவது கட்டாயம். பார்களின் நுழைவு வாயில்களில் சானிடைசர் வைக்க வேண்டும். பார்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்த பின்பே அனுமதிக்கப்படுவார்கள். பாரில் பொது இடங்களில் கைகழுவும் வசதியும், சானிடைசர்களும் இருக்க வேண்டும். பார்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்ணையும் பார் ஒப்பந்ததாரர் பதிவு செய்ய வேண்டும். நோய் அறிகுறி இல்லாதவர்களை மட்டுமே பார்களில் அனுமதிக்க வேண்டும்.

பார் ஊழியர்கள் அனைவரும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய கையுறைகள் அணிவதை உறுதிபடுத்தி கொள்ள வேண்டும். 55 வயதுக்கு மேற்பட்டவர்களை பார்களில் பணிக்கு வைத்திருக்க கூடாது. பார்களுக்கு உள்ளே செல்ல ஒரு வழியும், வெளியே செல்ல மற்றொரு வழியும் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் இன்று முதல் பார்கள் செயல்படும் என்றும் டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது. புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட்டுள்ளதால், இந்த மாதம் மது விற்பனை அளவு கணிசமாக உயரும் என்று தெரிகிறது.

Related Stories: