மனைகளுக்கு அனுமதி தர லஞ்சம் கேட்பதாக புகார் டிடிசிபி அலுவலகம் முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தம்: 1 மாதம் மேல் பைல் தேங்கினால் நடவடிக்கை; கணேசன் ஐஏஎஸ் எச்சரிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளைத் தவிர மாநிலம் முழுவதும் விவசாய நிலங்களை குடியிருப்பு நிலங்களாக மாற்றி விற்பனை செய்வதற்கும், அங்கு புதிய வீடுகளை கட்டுவதற்கும் நகரமைப்பு அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். வீடுகள் மட்டுமின்றி அலுவலகம், தொழிற்சாலைகள் என குறிப்பிட்ட அளவுக்கு மேல் கட்டும் அனைத்து கட்டிடதற்கும் அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதி பெறுவதற்கு விண்ணப்பம் செய்தால், அந்த விண்ணப்பம் உடனடியாக புரோக்கர்களின் கைகளுக்கு சென்று விடும். புரோக்கர்கள் விண்ணப்பம் செய்த உரிமையாளரிடம் சென்று சதுர அடிக்கு இவ்வளவு பணத்தை அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும். அப்போதுதான் பைல் ஒரு டேபிளில் இருந்து மற்றொரு டேபிளுக்கு செல்லும் என்று கூறுவார்கள். பணம் கொடுக்காவிட்டால் ஒரு இன்ச் கூட பைல் நகராது.

அதையும் மீறி உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தால் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, விண்ணப்பத்தை நிராகரித்து விடுவார்கள். இது குறித்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் நகரமைப்பு இயக்குநராக நியமிக்கப்ப்டடுள்ள கணேசன், லஞ்சத்தை தடுக்க அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் சென்னையில் உள்ள தலைமையிடத்தை தவிர 36 மாவட்டங்களில் நகரமைப்பு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகங்கள் அனைத்திலும் தற்போதது சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதை உயர் அதிகாரிகள் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு அலுவலகத்திலும் தினமும் குறைந்தது 15 முதல் 20 விண்ணப்பங்கள் வருகின்றன.

அவர்களை அதிகாரிகள் காத்திருக்க வைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் ஒவ்வொரு அலுவலகத்திலும் அதன் உயர் அதிகாரி, காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை கண்டிப்பாக பொதுமக்களை பார்த்து அவர்களது குறைகளை கேட்க வேண்டும். அதேபோல இயக்குநரும் காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டு தீர்வு செய்து வருகிறார். மேலும் ஒவ்வொரு அலுவலகத்திலும் தகவல் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் விண்ணப்பம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளவும், புதிய மனுக்களை கொடுக்கவும். தகவல் மையத்தையும் அணுகலாம்.

ஒருவர் விண்ணப்பம் கொடுத்து 30 நாட்களுக்குள் அதற்கு தீர்வு கண்டிருக்க வேண்டும். அல்லது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட அலுவலகத்திற்கும் இயக்குநர் கணேசன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பொதுமக்களை பணத்துக்காக அழைக்கழிப்பது, காத்திருக்க வைப்பது, விண்ணப்பத்தை தாமதப்படுத்துவது என்று யாராவது செய்வதாக புகார்கள் வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கணேசன் எச்சரித்துள்ளார். இதுவரை இருந்த அதிகாரிகள் பலர் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தனர். தற்போது புதிதாக வந்துள்ள கணேசன், அதிரடி நடவடிக்கையை தொடங்கியிருப்பது நகரமைப்பு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: