சென்னை முதலைப்பண்ணையில் அரிய வகை ஆமையை கடத்திய சர்வதேச வணிக கும்பல்!: 80 கிலோ ஆமையை கடத்தியது பணத்துக்கா..மருந்துக்கா?

சென்னை: சென்னை முதலைப்பண்ணையில் அரிய வகை அல்டாப்ரா ஆமையை கடத்தியது சர்வதேச விலங்கு வணிக கும்பல் என தெரியவந்திருக்கிறது. அவர்களால் பண்ணையில் உள்ள மற்ற விலங்குகளுக்கும் ஆபத்து ஏற்படும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படுகின்றன. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வடநெம்மேலியில் 8 ஏக்கர் பரப்பளவில்  முதலைப்பண்ணை செயல்படுகிறது. அதன் வளாகத்தில் அரிய வகை அல்டாப்ரா ஆமைகள் நான்கும் பரிமாறிக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று கடந்த நவம்பர் 12ம் தேதி முதல் மாயமானது. எங்கு தேடியும் கிடைக்காததால் பண்ணை நிர்வாகம் சார்பில் மாமல்லபுரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆமை மாயமான நாளன்று சென்னை அருகே நடமாடிய மர்ம கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் தொடர்பான சி.சி.டி.வி. பதிவுகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஷிபு என்று பெயரிடப்பட்ட பெண் அல்டாப்ரா ஆமையை விலங்கு வணிக கும்பல் கடத்தியிருக்க வாய்ப்பிருப்பதாக முதலைப்பண்ணை நிர்வாக இயக்குநர் ஆல்வின் ஜேசுதாசன் தெரிவித்துள்ளார். பணத்துக்காகவோ அல்லது மருந்து தயாரிக்கவோ ஆமை கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. அரியவகை உயிரினங்கள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் 2008ம் ஆண்டு பராகுவே உயிரின பூங்காவில் இருந்து அல்டாப்ரா ஆமைகள் நான்கும் சென்னை முதலைப்பண்ணைக்கு கொண்டுவரப்பட்டன. அவற்றில் ஷிபு என்ற பெண் ஆமை தான் தற்போது கடத்தப்பட்டுள்ளது. பொதுவாக இந்த வகை ஆமைகள் 225 கிலோ எடை வரை கொண்டதாகவும் 180 ஆண்டுகள் உயிர்வாழக்கூடியதாகவும் இருக்கும்.

ஆனால் தற்போது மாயமான பெண் அல்டாப்ரா ஆமை, 60 முதல் 80 கிலோ வரை எடை கொண்டது என்றும் வாழைப்பழம், ஆப்பிள் போன்றவற்றை ருசித்து சாப்பிடும் பழக்கம் உடையது என்றும் பண்ணை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 44 ஆண்டுகள் முதலை பண்ணை வரலாற்றில் நடைபெற்ற முதல் திருட்டு சம்பவம் இதுவாகும். முதலை பண்ணையின் தெற்கு பகுதியில் உள்ள சுற்றுச்சுவரை ஏறி குதித்து மர்மநபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். அதே பாணியில் மீண்டும் கைவரிசை காட்ட வாய்ப்புள்ளதால் முதலைப்பண்ணையின் சுற்றுச் சுவரை உயர்த்தி கட்டவும், பாதுகாப்பிற்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.

Related Stories: