மத்திய சிறைகளில் கைதிகளுக்கு வெளி உணவுகள் வழங்க தடை: அதிகாரிகள் தகவல்

வேலூர்: ஆங்கில புத்தாண்டையொட்டி மத்திய சிறைகளில் கைதிகளுக்கு வெளி உணவு வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் மொத்தம் 138 சிறைகள் உள்ளன. இவற்றில் 22 ஆயிரத்து 332 கைதிகளை அடைக்கும் இடவசதி உள்ளது. இந்தாண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் சிறைகளில் உள்ள கைதிகளை சந்தித்து பேச விதிக்கப்பட்ட தடை தற்போது வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய சிறைகளில் உள்ள கைதிகள் வீடியோ காலில் குடும்பத்தினருடன் பேசி வருகின்றனர்.

கிளை சிறைகளில் மட்டும் கைதிகளை சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ரம்ஜான், கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் தலைவர்களின் பிறந்த நாட்களில் தனியார் அமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் கைதிகளுக்கு சைவம் மற்றும் அசைவ உணவுகள் வழங்கும் நடைமுறைக்கும் தடை விதிக்கப்பட்டு வந்தது.

இதனால், வேலூர் மத்திய சிறை, பெண்கள் தனிச்சிறையில் கடந்த 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கைதிகளுக்கு தனியார் அமைப்புகள் மூலம் உணவு எதுவும் வழங்க அனுமதிக்கவில்லை. அதேபோல் வரும் புத்தாண்டு அன்றும் உணவு வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மத்திய, பெண்கள் தனிச்சிறைகளுக்கும் பொருந்தும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: