சென்னை மாநகராட்சியில் உள்ள குடிசை பகுதிகளை மேம்படுத்த தனி திட்டம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னையில் உள்ள குடிசை பகுதிகளை மேம்படுத்த தனித் திட்டம் செயல்படுத்த உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் மொத்தம் 800க்கும் மேற்பட்ட குடிசை பகுதிகள் உள்ளன. இவற்றில் 26 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்கள் வைத்திருந்தும் இந்த பகுதிகளில் பல ஆண்டுகளாக சாலை, குடிநீர், வடிகால், கழிப்பறை, சுகாதாரம் போன்ற வசதிகளை முறையாக செய்யப்படவில்லை.

இதனால், அங்கு வசிக்கும் மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள குடிசை பகுதிகளை மேம்படுத்த தனி திட்டம் ஒன்றை தயார் செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இதில், போக்குவரத்து கொள்கை மேம்பாட்டு நிறுவனம், மனித மேம்பாடு மற்றும் தீர்வுக்கான இந்திய நிறுவனம் ஆகிய நிறுவனங்களை சேர்ந்த பிரநிதிகள் கலந்து கொண்டனர். இதில், முதல்கட்டமாக ஒரு குடிசை பகுதியை தேர்வு செய்து ஆய்வு நடத்தி, இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் உள்ள குடிசை பகுதிகளில் செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, ஒரு பகுதி தேர்வு செய்யப்பட்டு அங்குள்ள வசதிகள் தொடர்பாக ஆய்வு நடத்தப்படும். இந்த ஆய்வின் அடிப்படையில் அந்த பகுதிகளில் மேம்பாட்டு பணிகள் செய்யப்படும். மனித மேம்பாட்டுக்கான நிறுவனம் சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாடு தொடர்பாகவும், போக்குவரத்து கொள்கை நிறுவனம் போக்குவரத்து மேம்பாடு தொடர்பாகவும் ஆய்வு நடத்தும்.

சென்னையில் உள்ள குடிசை பகுதிகள் பல்வேறு நிலையில் உள்ள காரணத்தால் பொதுவான திட்டம் தயார் செய்யப்படும். இதனை அடிப்படையாக கொண்டு அனைத்து பகுதிகளிலும் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். சில மாதங்களுக்கு சென்னை கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை மேம்படுத்தும் பணியை சென்னை மாநகராட்சி செய்தது. இதன்படி அடுக்குமாடி குடியிருப்புகளின் சுவர்களின் பல ஓவியங்கள் வரையப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலை விழா நடத்தப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள மாணவர்களின் முன்னேற்றத்திற்காக போட்டி தேர்வு பயிற்சி மையமும் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: