ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை ‘7’ டிகிரி செல்சியஸ்: சுற்றுலா பயணிகள் அவதி

ஊட்டி: ஊட்டியில் நேற்றும் உறை பனியின் தாக்கம் அதிகரித்ததால் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியசுக்கு சென்றது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களாக நீர் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. கடந்த ஒரு வாரமாக உறைப்பனி கொட்டி வருகிறது. இதனால், பகல் நேரங்களில் கடும்  வெயிலும், இரவில் கடும் குளிரும் நிலவுகிறது. கடந்த இரு நாட்களாக  ஊட்டியில் உறைப் பனியின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படுகிறது. நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகள், வனங்கள் மற்றும் புல்வேளிகள் அதிகம் உள்ள பகுதிகளில் உறைப்பனி கொட்டி கிடந்தது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம் போன்ற பகுதிகளில் உறை பனி கொட்டி கிடந்தது.

நேற்று ஊட்டியில் அதிக பட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்சம் 7 டிகிரி  செல்சியசாகவும் பதிவாகியிருந்தது. தற்போது உறைப்பனியின் தாக்கம்  அதிகரித்துள்ள நிலையில், தேயிலை செடிகள் மற்றும் மலை காய்கறி செடிகளும்  கருக துவங்கியுள்ளன. பகல் நேரங்களில் வெயில் வாட்டிய போதிலும், பிற்பகல் 4 மணிக்கு மேல் ஊட்டியில் குளிர் அதிகமாக காணப்பட்டது. இதனால் உள்ளூர் மக்கள்  மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். பெரும்பாலான  சுற்றுலா பயணிகள் ஸ்வெட்டர், ஜெர்கின், தொப்பி போன்ற வெம்மை ஆடைகளை வாங்க  கடைகளில் குவிந்தனர்.

Related Stories: