திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்க கொரோனா சான்று கட்டாயமில்லை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருநள்ளாறு சனிபெயர்ச்சியை ஒட்டி சனீஸ்வர பகவான் கோயிலுக்கு வரும் பக்தர்கள், கொரோனா பரிசோதனை சான்றை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சனி பெயர்ச்சியை ஒட்டி டிசம்பர் 27ம் ( இன்று) தேதி முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிக்கும் முடிவை கைவிடக்கோரி  கோயிலின் பரம்பரை ஸ்தானிகர்கள் சங்க தலைவரான எஸ்.பி.எஸ். நாதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி அனிதா சுமந்த்,  முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும், கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும் சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்துவது தொடர்பாக புதுச்சேரி இந்து சமய அறநிலையத் துறைச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் அடங்கிய கூட்டத்தை  கூட்டி  முடிவெடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். இதில் கொரோனா பரிசோதனை சான்றிதழை பக்தர்கள் சமர்பிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

இந்த முடிவை எதிர்த்து காரைக்காலை சேர்ந்த சிங்காரவேலன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நேற்று அவசர வழக்காக, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் மஞ்சுளா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பும் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வெப்ப நிலை பரிசோதனை செய்ய வேண்டும், வெப்ப நிலை அதிகமாக இருக்கும் நபர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை செய்து கொரோனா அறிகுறிகள் இல்லாத பக்தர்களை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

தங்க காகம் வாகனத்தில் சனி பகவான்

சனி பகவான் இன்று (27ம் தேதி) அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி காரைக்கால் அடுத்த திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி, கோயிலில் நேற்று முன்தினம் இரவு சிறப்பு பூஜை நடந்தது.

பின்னர் சனி பகவான் தங்க காகம் வாகனத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இன்று அதிகாலை 27 வகையான பொருட்களால் சனி பகவானுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. சகஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெற்றது.

Related Stories: